Sunday, 6 December 2020

அவபக்தியுள்ள காயீன்!

அத்தியாயம் 4

(தேவ பக்தியும்¸ அவ பக்தியும்!)


“பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதர னைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்;  அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்?  தன் கிரியைகள் பொல்லாதவைகளும்¸ தன் சகோதரனுடைய கிரியைகள்     நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந் தானே.” (1 யோவான் 3:12)

“இவர்களுக்கு ஐயோ!  இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து¸ பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி¸ கோரா எதிர்த்துப் பேசின பாவத்திற்குள்ளாகி¸ கெட்டுப்போனார்கள்.”  (யூதா 1:11)

காயீனைக் குறித்து வேதம் சொல்லுகிறது:

1. அவன் பொல்லாங்கனால் (சாத்தானால்) உண்டானவன்.  அதாவது காயீன்¸ ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மூத்தமகனாகத் தேவனால் கொடுக்கப்பட்டிருந்தாலும்¸ அவன் பொல்லாங்கனாகிய சாத்தானுக்கு இடங்கொடுத்து அவனுடைய பிள்ளையானான்.

2. அவன் கெட்ட வழியில் நடக்கிறவனாய்க் காணப்பட்டான்.  தன்னையும் தன் காணிக்கையையும் தேவன் அங்கீகரிக்காததை அவன் கண்டபோது¸ அவனுக்குள் எரிச்சல் உண்டானது; அவன் முகநாடி வேறுபட்டது.

3. அவன் நன்மை செய்வதைக் காட்டிலும் தீமை செய்வதையே தெரிந்துகொண்டான். அவனுடைய கிரியைகள் (செய்கைகள்) பொல்லாதவைகளாய் இருந்தன.  இதினிமித் தம் அவன் தன் தம்பியாகிய ஆபேலைக் கொலை செய்தான்.

ஆதாமின் முதல் தலைமுறையிலேயே துணிகரமான பாவமாகிய “கொலை” காணப்பட்டது. பாவத்தின்மேல் பாவத்தை மனிதன் செய்ய ஆரம்பித்து விட்டான்.  இதினிமித் தம் மனிதன் தேவனோடுள்ள ஐக்கியத்தை (உறவை) முற்றிலும் இழக்க நேர்ந்தது.  தேவ சமூகத்தை இழந்த காயீன் பக்தியற்ற ஒரு சந்ததியின் தகப்பனானான். பக்திமானும்¸ நீதிமானுமாகிய ஆபேலுடைய சந்ததி இவ்வுலகை விட்டு மறைந்தது.

காயீனின் வழிநடந்த லாமேக்கு!

“காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி¸ ஏனோக்கைப் பெற்றாள்;  அப்பொழுது அவன் (காயீன்) ஒரு பட்டணத்தைக் கட்டி¸ அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான்.

ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றான்;  மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான்;  மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான்.

லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்;  ஒருத்திக்கு ஆதாள் என்று பேர்;  மற்றொருத்திக்குச் சில்லாள் என்று பேர்.” (ஆதியாகமம் 4:17¸18¸19)

“லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே¸ சில்லாளே¸ நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே¸ என் சத்தத்துக்குச் செவி கொடுங்கள்;  எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்;  எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலை செய்தேன்;”  (ஆதியாகமம் 4: 23)

ஆபேலைக் கொலைசெய்த காயீனுடைய சந்ததியிலே ஐந்தாம் தலைமுறையிலே பிறந்தவர் லாமேக்கு.  இந்த லாமேக்கு தன் முற்பிதாவாகிய காயீனுடைய வழியில் நடந்து தனக்குக் காயமுண்டாக்கின¸ தனக்குத் தழும்பு உண்டாக்கின ஒரு வாலிபனைக் கொலை செய்தான்.  அதைத் தன் மனைவிமார்களும் அறிந்திருக்கும்படி செய்தான்.

லாமேக்கு காயீனுடைய வழியில் நடந்தது மட்டுமல்ல¸ தேவன் நியமித்த நியமமாகிய ஒருவனுக்கு ஒருத்தி என்ற பிரமாணத்தை மீறினான்.  முதன் முதலில் இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணி குடும்ப வாழ்வை நடத்தினவர் இந்த லாமேக்கு.  காயீனுடைய சந்ததியினர் எதிர்கால சந்ததிக்கு தவறான வழிமுறைகளை வித்திட்டுச் சென்றனர்.  

நாட்கள் செல்லச் செல்ல ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளோடு வாழ்வது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது.  இன்றைக்கும் காயீன் மற்றும் லாமேக்குடைய வழியில் நடக்கிற அநேகர் நம் நடுவிலும் உண்டு.

கொலை செய்வது¸ விபச்சாரம் மற்றும் வேசித்தனம் செய்வது மாம்சத்தின் கிரியையாயிருக்கிறது.  கலாத்தியர் 5-ஆம் அதிகாரம்¸ 19 முதல் 21 வரை உள்ள வசனங்களில் வேதம் மாம்சத்தின் கிரியைகள் எவை எவை என்று வகையறுக்கிறது:

“மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன்  அவையாவன: விபசாரம்¸ வேசித்தனம்¸ அசுத்தம்¸ காமவிகாரம்¸ விக்கிரகாராதனை¸ பில்லிசூனியம்¸ பகைகள்¸ விரோதங்கள்¸ வைராக்கியங்கள்¸ கோபங்கள்¸ சண்டைகள்¸ பிரிவினைகள்¸ மார்க்கபேதங்கள்¸

பொறாமைகள்¸ கொலைகள்¸ வெறிகள்¸ களியாட்டுகள் முதலானவைகளே;  இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

இப்படிப்பட்ட மாம்சத்தின் கிரியைகளில் ஏதாவது நம்மிடம் காணப்படுமானால்¸ நம்மால் தேவனுடைய ராஜ்யம் எனப்படுகிற பரலோகத்திற்குள் செல்லமுடியாது.  இப்படிப்பட்ட பாவங்களை விட்டு மனந்திரும்பி நாம் புதுசிருஷ்டியாய் மாறும்பொழுதுதான் பரலோக வாழ்வுக்குத் தகுதியுடையவர்களாகிறோம்.

காயீனின் சந்ததி அழிந்தது!

காயீன் தன் தம்பியாகிய ஆபேலைக் கொலை செய்த பாவத்திலிருந்து மனந்திரும்பவில்லை.  மாறாக அவன் தனக்கென்றும் தன் சந்ததிக்கென்றும் ஒரு பட்டணத்தைக் கட்டிக் கொண்டு அதிலே வாழ்ந்து சுகமாயிருக்க விரும்பினான்.  ஆகவே¸ அவன் எத்தனை ஆண்டு காலம் இந்த உலகத்தில் வாழ்ந்து மரித்தான் என்பதை வேதம் சுட்டிக் காட்டவில்லை.  

ஒருவேளை காயீனுடைய ஆத்துமாதான் மரித்து வேதனையுள்ள இடமாகிய பாதாளத்திற்குச் சென்ற முதல் ஆத்துமாவாக இருக்கலாம். மட்டுமல்ல¸ காயீனுடைய சந்ததி பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் முற்றிலுமாக அழிந்து மாண்டது.  ஆகவே¸ காயீன் மற்றும் லாமேக்கைப்போல வாழாமல் கர்த்தருக்குப் பயந்து அவர் கட்டளைகளின் வழிநடப்போம்.

காயீன் மற்றும் அவன் சந்ததியார் வாழ்ந்த காலம் மனச்சாட்சியின் காலம் எனப்படுகிறது.  அதாவது மனிதர் களின் மனச்சாட்சியில்¸ எது நல்லது எது கெட்டது என்ற அறிவைத் தந்து தேவன் அவர்களை நடத்தி வந்தார்.  மனச்சாட்சியின் மூலம் அவர்களோடு பேசினார்.  சிலவேளைகளில் நேரடியாகவும் பேசினார்.  

ஆனால்¸ அந்நாட்களில் வாழ்ந்த பக்தியற்ற மனுஷர்கள் அதற்குக் கீழ்ப்படியவில்லை. அதற்கு மாறாக அவர்கள் துணிகரமாக வாழ்ந்தார்கள். தங்கள் மனதும் மாம்சமும் விரும்பினதைச் செய்து தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தார்கள்.  ஆகவே தேவனால் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோனார்கள்.

0 comments:

Post a Comment