அத்தியாயம் 1
(இயேசு கிறிஸ்துவின் அதிசய பிறப்பு!)
“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர்¸ ஆலோசனைக் கர்த்தா¸ வல்லமையுள்ள தேவன்¸ நித்திய பிதா¸ சமாதானப்பிரபு எனப்படும்.” (ஏசாயா 9:6)
இயேசுகிறிஸ்துவின் பிறப்பு மற்ற மனிதர்களின் பிறப்பைவிட பலவிதங்களில் வித்தியாசமானதாக இருந்தது. ஏனென்றால் அவர் தேவ குமாரன். அவர் மாம்ச உருக்கொண்டு மனிதனாக அவதரித்ததினால் அவர் மனுஷ குமாரன் என்றும் அழைக்கப்பட்டார்.
இயேசுகிறிஸ்துவின் பிறப்பின் மகத்துவத்தை கீழ்க்காணும் மூன்று காரியங்களிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம். முதலாவதாக அவருடைய பிறப்பு முன்னறிவிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவதாக அவருடைய பிறப்பு சரித்திரப்பூர்வமான ஒன்று. மூன்றாவதாக¸ அவருடைய பிறப்பு அதிசயமானதும்¸ தெய்வீகத் தன்மையுள்ளதுமாயிருந்தது.
முன்னறிவிக்கப்பட்ட இயேசுவின் பிறப்பு:
இயேசுகிறிஸ்துவின் பிறப்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்ட (முன்னறிவிக்கப்பட்ட) ஒரு சம்பவம். இயேசு யூதா கோத்திரத்தில் (யூதர்கள் வம்சத்தில்) பிறப்பார் என்று கி.மு. 1689-ம் ஆண்டில் யாக்கோபு தீர்க்கதரிசனமாய்க் கூறியுள்ளார் (ஆதியாகமம் 49:10).
இயேசு இஸ்ரவேல் தேசத்தில் ஒரு நட்சத்திரம் உதிப்பதுபோல உதிப்பார் என்று பிலேயாம் என்ற தீர்க்கதரிசி கி.மு. 1452-ம் ஆண்டில் அறிவித்திருக்கிறார் (எண்ணாகமம் 24:17).
இயேசு ஒரு தெய்வீகப் பிறவியாகக் கன்னிகையின் மூலம் பிறப்பார் என்றும்¸ தாவீது என்னும் அரசனின் சந்ததியில் பிறப்பார் என்றும் ஏசாயா தீர்க்கதரிசியினால் கி.மு. 713-ல் அறிவிக்கப்பட்டது (ஏசாயா 7:14¸ ஏசாயா 9:6¸7).
இயேசு உலகின் மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள யூதேயா தேசத்திலிலுள்ள “பெத்லகேம்” என்ற சிற்றூரில் பிறப்பார் என்று மீகா என்ற தீர்க்கதரிசி கி.மு. 710-ம் ஆண்டில் அறிவித்தார் (மீகா 5:2).
இந்த வேத வசனங்களையெல்லாம் நாம் சற்று சிந்தித்துப் பார்ப்போமானால் இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பு தற்செயலாக நடந்த சம்பவமன்று. அது நம்மை உண்டாக்கிய தேவனால் முன்குறிக்கப்பட்ட ஒன்று. ஆதியிலே திட்டம்பண்ணப்பட்ட ஒன்று.
ஆதியிலே தேவனோடுகூட சிருஷ்டிப்பிலே பங்கு பெற்ற இயேசு¸ பிதாவின் வார்த்தையை நிறைவேற்ற சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு மாம்சமானார் (மனிதனானார்). இயேசு இந்த உலகத்திற்கு வரும்படி தன்னை அர்ப்பணித்த பொழுது இவ்வாறாகக் கூறினார்: “பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல்¸ என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரண பலியையும் நீர் கேட்கவில்லை.
அப்பொழுது நான்¸ இதோ¸ வருகிறேன்¸ புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது; என் தேவனே¸ உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.” (சங்கீதம் 40:6-8). ஆகவே¸ இயேசுவினுடைய பிறப்பு தேவனுடைய முன்னறிவிப்பின்படியே நடைபெற்ற ஒன்றாகும்.
சரித்திரப்பூர்வமான இயேசுவின் பிறப்பு!
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மையமாக வைத்து உலக சரித்திரம் கி.மு. என்றும் கி.பி. என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இயேசுவின் பிறப்பை அன்று உலகிற்கு வெளிப்படுத்த ஒரு வால்நட்சத்திரம் தோன்றியது.
கி.மு.5-க்கும்¸ கி.மு.2-க்கும் இடைப்பட்ட காலத்தில் எகிப்திய மாதங்களின் தொடக்கமாகிய மெசொரி மாதத்தில் அதிகாலையில் மிகவும் பிரகாசமான வால் நட்சத்திரம் பூமிக்கு மிகவும் அருகில் வந்ததாக சரித்திர ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"மெசொரி" என்ற வார்த்தைக்கு “ஒரு அசரகுமாரனின் பிறப்பு” என்று அர்த்தமாம். டயோனிசியஸ் எக்சிகஸ் என்பவர் உருவாக்கிய சரித்திர நாட்காட்டியை வைத்து கணக்கிட்ட வேதஆராய்ச்சியாளர்கள் கி.மு. 4-ல் இயேசு பிறந்ததாகக் கணக்கிடுகின்றனர்.
இயேசு பிறந்த காலத்தில் வாழ்ந்த வானசாஸ்திரிகள் யூதேயா தேசத்தில் ஒரு இராஜா பிறந்திருக்கிறார் என்று சொல்லி யூதேயா தேசத்திற்குச் சென்று அங்குள்ள இராஜாவின் அரண்மனையில் விசாரித்தனர். ஆனால் அங்கு அவரைக் காணாமல் அவரைத் தேடி விசாரித்து அவர் யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற சிற்றூரில் பிறந்திருக்கிறார் என்று கண்டு அவரைப் பணிந்துகொண்டனர் (மத்தேயு 2:1-12).
அதிசயமான இயேசுவின் பிறப்பு!
இயேசுகிறிஸ்து அதிசயமானவர். அவர் பிறப்பு ஓர் அதிசயம். ஏனென்றால்¸ இந்த உலகத்தில் ஒரு மனிதனும் பிறக்காத விதத்தில் அவர் பிறந்தார். கன்னிகையின் வயிற்றில் உருவாகிப் பிறந்தார். இது ஓர் அதிசயம்.
பொதுவாக¸ இந்த உலகத்தில் ஒரு குழந்தை பிறப்பதற்கு ஓர் பொற்றோர் அவசியம் (ஒரு ஆண் மற்றும் பெண்). இவர்கள் இருவருடைய மாம்சம் மற்றும் இரத்தத்திலிருந்து பிறப்பதுதான் ஒரு குழந்தை. ஆனால்¸ இந்த உலகத்தில் ஒரே ஒரு குழந்தை மாத்திரம் இதற்கு விதிவிலக்கு. அதுதான் பாலகனாகிய இயேசுகிறிஸ்து!
ஒரு புருஷனை அறியாத கன்னிகையிடம் இயேசு பிறந்தது அவர் அதிசயமானவர் என்றும் தெய்வீகத்தன்மை உடையவர் என்பதையும் வெளிப்படுத்துகிறது. இயேசுவின் தாயாகிய மரியாளும் (மிரியாம்)¸ அவருடைய வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பும் பாலஸ்தீன நாட்டிலுள்ள நாசரேத் ஊரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
யூதர்களுடைய வழக்கத்தின்படி நிச்சயம் செய்யப்பட்ட ஒரு ஆணுக்கும்¸ பெண்ணுக்கு மிடையே மூன்று கட்டங்களாக ஒப்பந்தங்கள் செய்யப்படுகிறது. அவையாவன: முதலாவது கடடமாக சிறுபிராயத்தில் இன்னாருக்கும் இன்னாருக்கும் திருமணம் செய்யப்படும் என்று பெற்றோர்களுக்கிடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது.
இரண்டாவது கட்டமாக¸ பிள்ளைகள் திருமண பருவத்தை அடையும்போது இருபாலரு டைய சம்மதத்தைக் கேட்டறிந்து ஒப்பந்தம் செய்துகொள்ளுவார்கள்.
மூன்றாவது கட்டமாக¸ திருமணம் நடைபெறவிருக்கும் ஒரு ஆண்டுக்கு முன்பாக சமுதாய மக்களின் முன்னிலையில் இரு வீட்டாரும் ஒப்பந்தம் செய்துகொள்வார்கள். நிச்சயிக்கப்பட்ட பெண் அந்த ஒரு வருடகால இடைவெளியில் தனது கன்னித்தன்மையைக் காத்துக்கொள்ளவேண்டும்.
ஒருவேளை அவள் தன் தவறான நடக்கையினால் கர்ப்பவதியானால்¸ அந்த ஒருவருட இடைவெளியில் அது தெரியவரும் போது¸ யூத வேதச் சட்டப்படி நிச்சயிக்கப்பட்ட மணமகன் அவளோடு செய்த நிச்சயதார்த்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணை நிச்சயித்துத் திருமணம் செய்து கொள்ள உரிமையுண்டு.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் மரியாள் கர்ப்பவதியானாள் என யோசேப்புக்கு அறிவிக்கப்பட்டது. ஆகவே யோசேப்பு மரியாளை அவமானப்படுத்த மனதில்லாமல் இரகசியமாகத் தள்ளிவிட மனதாயிருந்தான். ஆனால் யோசேப்பு நீதிமானாயிருந்தபடியினால் அவன் மரியாளைத் தள்ளிவிடுவதைத் தேவன் விரும்பவில்லை. ஆகவே¸ பிதாவாகிய தேவன் சொப்பனத்திலே ஒரு தேவதூதனை யோசேப்பினிடத்தில் அனுப்பி அவனுக்கு அறிவுரை கூறினார்: “…தாவீதின் குமாரனாகிய யோசேப்பே¸ உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.
அவள் ஒரு குமாரனைப் பெறுவாள்¸ அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்…
யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து¸ கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக் கொண்டு¸ அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து¸ அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.” (மத்தேயு 1: 20 – 25)
0 comments:
Post a Comment