Monday, 28 December 2020

வேறே தேவர்கள்!

அன்றன்றுள்ள அப்பம்
(டிசம்பர் 29 செவ்வாய்க்கிழமை 2020)

"என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்" (யாத். 20:3).


கர்த்தரே உங்களுடைய தேவன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர் அவர்தான். காணப்படுகிறவைகள், காணப்படாதவைகள் எல்லாவற்றையும் சிருஷ்டித்தவர் அவர்தான். உங்கள்மேல் அதிக அக்கறைக் கொண்டிருக்கிறவரும் அவர்தான். அவர் அன்போடு உங்களைப் பார்த்து, "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்" என்கிறார்.

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரவேலர்மேல் கர்த்தர் மனதுருகினார். விக்கிரக வழிபாட்டிலிருந்து அவர்களை வேறுபடுத்தி, தம்முடைய சொந்த ஜனங்களாகத் தெரிந்து கொண்டு தன்னை வெளிப்படுத்தச் சித்தமானார். எகிப்தின் தெய்வங்கள் மேல் நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்தார். எகிப்தின் மந்திரவாதிகள் மேல் தண்டனையை செலுத்தினார். பார்வோனுடைய கையில் இருந்த இஸ்ரவேலரை அவர் விடுவித்தபோது, இஸ்ரவேலர் மேல் மனதுருகி அவர்களுக்கு நீதியும் நியாயமும் செய்யச் சித்தமானார்.

இஸ்ரவேலர் ஏறக்குறைய நானூறு ஆண்டுகளாக எகிப்தில் கொத்தடிமைகளாகப் பணி புரிந்தார்கள். அவர்களுக்கு மறுக்கப்பட்ட சம்பளத்தை ஈடு செய்யும்படி, அவர்கள் புறப்படும்போது எகிப்தியரிடமிருந்து தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த ஆடைகளைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் எகிப்தியரை கொள்ளையிட கர்த்தர் அனுமதித்தார் (யாத். 12:36). இதன் நிமித்தம் இஸ்ரவேலரிடம் ஏராளமான தங்கம் இருந்தது.

தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு மீட்கப்பட்டு, கானானுக்குச் செல்லும் வழியில், சிவந்த சமுத்திரத்தைக் கடந்த இஸ்ரவேலர், விக்கிரக ஆராதனை என்னும் வலையில் விழுந்தார்கள். மோசே சீனா மலையில் நியாயப்பிரமாணத்தைப் பெற்றுக் கொண்டிருந்தபோது, இஸ்ரவேல் மக்கள் தாங்கள் எகிப்திலிருந்து கொண்டு வந்த பொன்னணிகளை உருக்கி, பொற்கன்றுக்குட்டியை விக்கிரகமாகச் செய்து, அதை வணங்கத் துவங்கினார்கள். கர்த்தர் நன்மையாய் இருக்கும்படி கொடுத்த பொன்னைக் கொண்டு அவர்கள் தங்களுக்குத் தாங்களே கேடுண்டாக்கிக் கொள்ளும்படி விக்கிரகங்களைச் செய்து விட்டார்கள் (யாத்.32:1-4).

நீங்கள் இந்த உலகத்தில் மகிழ்ச்சியுடன், அனுபவிக்க அநேக மேன்மைகளைக் கர்த்தர் கொடுத்திருக்கிறார். அவைகள் கர்த்தருடைய சட்ட திட்டத்தின் கீழிருக்கும் போது ஆசீர்வாதமாயிருக்கும். பொன்னை கர்த்தர் உண்டாக்கினார்; பணத்தையும் கர்த்தர்தான் உண்டாக்கினார். பணத்தை ஊழியத்திற்கு பயன்படுத்தலாம். பணத்தை செலவழித்து ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தலாம். ஆனால் இந்த பொன்னும், பணமும் பொருளாசையாக மாறும்போது விக்கிரகங்களாக மாறிவிடுகின்றன. கிறிஸ்துவைவிட நீங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அவை விக்கிரகங்களாக மாறுகின்றன.

உங்களுக்கு உணவு அவசியம்! ஆனால் அதுவும் அளவுக்கு மீறும்போது விக்கிரகமாகி விடுகிறது. அதுவே உபவாசத்திற்கும், ஜெபத்திற்கும் தடையாய் அமைந்து விடுகிறது. தேவபிள்ளைகளே, உங்களுக்கு விக்கிரங்களை நீங்களே உண்டாக்கிக் கொள்ளாதேயுங்கள்.

நினைவிற்கு:- "பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக் கொள்வீர்களாக. ஆமென்" (1 யோவா. 5:21).

1 comments:

Top NEET Coaching Classes in Nagpur
Wankhede Madam’s Academy is one of the best institutes in Maharashtra and India providing coaching of all India medical and engineering entrance.

Post a Comment