அத்தியாயம் 3
(தேவ பக்தியும்¸ அவ பக்தியும்!)
“பின்பு தேவனாகிய கர்த்தர்: இதோ¸ மனுஷன் நன்மை தீமை அறியத்தக்கவனாய் நம்மில் ஒருவரைப் போல் ஆனான்; இப்பொழுதும் அவன் தன் கையை நீட்டி ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்து¸ புசித்து¸ என்றைக்கும் உயிரோடிராதபடிக்குச் செய்யவேண்டும் என்று¸
அவன் எடுக்கப்பட்ட மண்ணைப் பண்படுத்த தேவனாகிய கர்த்தர் அவனை ஏதேன் தோட்டத்திலிருந்து அனுப்பிவிட்டார்.
அவர் மனுஷனைத் துரத்திவிட்டு¸ ஜீவவிருட்சத்துக்குப் போம் வழியைக் காவல் செய்ய ஏதேன் தோட்டத்துக்குக் கிழக்கே கேருபீன்களையும்¸ வீசிக்கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்” (ஆதியாகமம் 3: 22-24).
தேவன் மனிதனுக்கு முன்பாக இரண்டு காரியங்களை வைத்தார்: ஒன்று ஜீவன்¸ மற்றொன்று மரணம். இரண்டையும் கனிகளாய் மரங்களிலே அவனுக்கு முன்பாக வைத்தார். மேலும்¸ அவனுக்கு சுயமாய் சிந்தித்துச் செயல்படும் ஆற்றலையும் கொடுத்திருந்தார். ஆனால்¸ மனிதன் தெரிந்து கொண்டது ஜீவனையல்ல் மரணத்தையே.
ஜீவ விருட்சத்தின் கனியைப் பறித்துப் புசித்திருந்தால் ஆதாம் மரணத்தைக் காணாமல் என்றென்றும் வாழ்ந்திருக்கலாம். மாறாக¸ ஆதாமும் ஏவாளும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசித்து மரணத்தை ஏற்றுக்கொண்டார்கள்.
ஆவி¸ ஆத்துமா¸ சரீரம்:
ஆதாமை தேவன் உண்டாக்கினபொழுது அவனுக்குள் ஆவி¸ ஆத்துமா¸ சரீரம் என்று மூன்று ஆள்தத்துவங்கள் காணப்பட்டது. ஏனென்றால் அவன் தேவனுடைய சாயலின்படியேயும்¸ தேவனுடைய ரூபத்தின்படியேயும் உண்டாக்கப்பட்டவன். ஆவி மற்றும் ஆத்துமா இவ்விரண்டும் சரீரத்திற்குள் மறைந்திருக்கின்றன. எனவே¸ அதை உள்ளான மனிதன் என்றழைக்கிறோம். வெளிப்புறத்திலுள்ள சரீரம் மாம்சத்தினாலும் இரத்தத்தினாலும் உருவான ஒன்றாயிருக்கிறது.
சரீரமாகிய வெளிப்புற மனிதன் ஆவியையும்¸ ஆத்துமாவையும் உள்ளடக்கிய ஒரு கூடாரம் போலக் காணப்படுகிறான். மனிதன் கீழ்ப்படியாமையினாலே மரணத்தை ஏற்றுக்கொண்ட உடனே¸ உள்ளான மனிதனில்தான் உடனடியான மரணம் நேரிட்டது. சரீர மரணம் ஏற்பட நாட்கள் சென்றது. இதை ஆதியாகமம் 5-ஆம் அதிகாரம் 4¸ 5 வசனங்களில் காணலாம்:
“ஆதாம் சேத்தைப் பெற்றபின்¸ எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து¸ குமாரரையும் குமாரத்தி களையும் பெற்றான். ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்.”
நன்மை தீமை அறிகிற அறிவு:
நன்மையை மட்டுமே அறிந்தவனாய் உண்டாக்கப்பட்ட மனிதன்¸ நன்மை தீமை அறியத் தக்க விருட்சத்தின் கனியைப் பறித்துப் புசித்தபடியினாலே¸ தீமை இன்னதென்று அறிந்துகொண்டான். நன்மை தீமை இரண்டையும் செய்யக் கற்றுக்கொண்டான். நன்மையைவிடத் தீமையையே பற்றிக் கொள்ளுகிறவனாகக் காணப்பட்டான்.
ஆதாம் பாவஞ்செய்த பின்பு¸ ஆதாமிடமும் அவன் சந்ததியிடமும் தேவன் எதிர்பார்த்தது என்னவென்றால்: நன்மை தீமை அறியத்தக்க அறிவுடைய மனிதன் தீமையை வெறுத்து நன்மையைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதே. ஆனால்¸ மனிதன் நன்மையைவிட தீமையையே தெரிந்துகொள்ளுகிறவனாயிருந்தான். ஆதாமின் குமாரனாகிய காயீனின் வாழ்க்கையில் இதை நாம் காணலாம். ஆதியாகமம் 4-ஆம் அதிகாரம் 6¸ 7 வசனங்களில் இவ்வாறு வாசிக்கிறோம்:
“அப்பொழுது கர்த்தர் காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? நீ நன்மை செய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மை செய்யாதிருந்தால் பாவம் வாசற்படியில் படுத்திருக்கும்…”
காயீன் ஆபேலைக் கொலை செய்வதற்கு முன்பாகவே தேவன் இந்த வார்த்தைகளை அவனோடு பேசியிருந்தார். ஆனால்¸ அவனோ நன்மை செய்வதை விட்டுவிட்டு கொலை என்கிற தீமையைத் தெரிந்துகொண்டான். தன் தம்பியாகிய ஆபேலைக் கொலை செய்ய சமயம் தேடினான். அவன் வயல்வெளியில் தனித்திருக்கும் சமயத்தில் அவனுக்கு விரோதமாக எழும்பி அவனைக் கொலைசெய்தான் (ஆதியாகமம் 4:8).
அதுமட்டுமல்ல¸ “ஆபேல் எங்கே?” என்று தேவன் கேட்டபொழுது¸ அவன் எங்கேயென்று எனக்குத் தெரியாது; நான் அவனுக்குக் காவலாளியோ? (ஆதியாகமம் 4:9) என்று கேட்டான். தன் சகோதரனைக் காத்து அவனுக்கு நன்மை செய்யவேண்டிய காயீன் அவனுக்கு விரோதமாய் எழும்பி அவனுக்குத் தீமைசெய்தான். ஆகவே¸ தேவனிடத்திலிருந்து சாபத்தைப் பெற்றுக்கொண்டான்.
0 comments:
Post a Comment