Saturday, 14 November 2020

பக்தியுள்ள முதல் குடும்பம்!

அத்தியாயம் 2 

(தேவபக்தியுள்ள சந்ததி!)

"தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டு வந்து¸ அதைப் பண்படுத்தவும்  காக்கவும் வைத்தார்.

தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.

ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.  பின்பு¸ தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல¸ ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்" (ஆதியாகமம் 2:16-18)

தேவன் ஆதாமை உண்டாக்கி¸ அவனை ஏதேன் என்னும் தோட்டத்தில் வாழவைத்தார்.  அந்தத் தோட்டத்தில் அவனுக்குத் தேவையான சகலவிதமான கனிதரும் மரங்களையும் நாட்டியிருந்தார்.  அதோடுகூட தோட்டத்தின் நடுவிலே இரண்டுவிதமான மரங்களையும் வைத்திருந்தார்.  அதில் ஒன்று ஜீவவிருட்சம்; மற்றொன்று நன்மை தீமை அறியத்தக்க மரம்.

இப்படிப்பட்ட கனி விருட்சங்கள் நிறைந்த அந்தத் தோட்டத்தைப் பண்படுத்திப் பாதுகாக்கும் பணியை அவனுக்குக் கொடுத்தார்.  அதுமட்டுமல்ல¸ தான் உண்டாக்கின பறவைகள்¸ மிருகங்கள்¸ ஊரும் பிராணிகள்¸ கடல்வாழ் ஜந்துக்கள் ஆகிய யாவற்றையும் ஆளுகின்ற அதிகாரத்தையும் அவனுக்குக் கொடுத்தார்.

மேலும்¸ தேவன் ஆதாமுக்கு அவன் கைக்கொள்ளும்படிக்கு ஒரே ஒரு கட்டளையையும் கொடுத்தார்.  அந்தக் கட்டளை என்னவென்றால்¸ தோட்டத்திலுள்ள சகல கனிகளையும் அவன் பறித்துப் புசிக்கலாம்.  ஆனால்¸ அந்ததத் தோட்டத்தின் நடுவிலுள்ள மரமாகிய நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை மாத்திரம் அவன் புசிக்கக்கூடாது என்பதுதான்.  அதைப் புசிக்கும் நாளிலே அவன் சாகவே சாவான் என்பதாகவும் கூறினார்.

தாம் உண்டாக்கிய மனிதனாகிய ஆதாம் தனிமையாய் அந்தத் தோட்டத்தில் இருப்பது நல்லதல்ல என்று தேவன் கண்டு¸ அவனுக்கு ஒரு துணையை (பெண்ணை) அவன் விலா எலும்பிலிருந்து உண்டாக்கினார்.  அவள்தான் ஏவாள்.  அவளே ஜீவனுள்ள மனிதர்கள் அனைவருக்கும் தாயானவள்.  அவள் மூலமாய் இந்த உலகத்தில் சந்ததிகள் தோன்ற ஆரம்பித்தன.

ஆதாமும் ஏவாளும் தங்கள் இல்லற வாழ்க்கையை ஏதேன் தோட்டத்தில் சந்தோஷமாய் ஆரம்பித்தனர்.  ஒவ்வொருநாளும் அதிகாலையில் தேவனோடு உறவாடி மகிழ்ந்தனர்.  தேவ பக்தியுள்ள நல்ல குடும்பமாகத் திகழ்ந்தனர்.

ஒருநாள் ஏதேன் தோட்டத்திற்குள் சாத்தான் என்கிற சத்துருவானவன் பாம்பின் மூலமாக நுழைந்தான்.  தோட்டத்தின் ஒரு பகுதியில் ஏவாள் தனித்திருந்த பொழுது¸ அவளோடு பேசத்தொடங்கினான்.  அவளைத் தன் பொய் வார்த்தைகளினால் மயங்கப்பண்ணினான்.

சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட அந்தப் பெண் தேவன் புசிக்கவேண்டாம் என்று விலக்கின நன்மை தீமை அறியத்தக்க கனியைப் பறித்துப் புசித்து¸ தன் கணவனுக்கும் கொடுத்தாள்.  ஆதாமும் அதை வாங்கிப் புசித்து தேவனுடைய கட்டளையை மீறினான்; தேவனுக்குக் கீழ்ப்படியாமற்போனான். பக்தியுள்ள அந்த முதல் குடும்பத்திற்குள் பாவம் பிரவேசித்தது.


ஸ்திரீயின் வித்து:

“அப்பொழுது தேவனாகிய கர்த்தர் சர்ப்பத்தைப் பார்த்து: நீ இதைச் செய்தபடியால் சகல நாட்டு மிருகங்களிலும் சகல காட்டு மிருகங்களிலும் சபிக்கப்பட்டிருப்பாய்¸ நீ உன் வயிற்றினால் நகர்ந்து¸ உயிரோடிருக்கும் நாளெல்லாம் மண்ணைத் தின்பாய்; 

உனக்கும் ஸ்திரீக்கும்¸ உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார்¸ நீ அவர் குதிங்காலை நசுக்குவாய் என்றார்.” (ஆதியாகமம் 3: 14¸15)

பக்தியுள்ள குடும்பத்தை (ஆதாம் - ஏவாள்) பாவத்திலே விழத்தள்ளி தேவனுடைய திட்டத்தைக் குலைத்துப்போட சாத்தான் முயன்றான். ஆனால்¸ நம் தேவன் அனந்த ஞானமுள்ளவர்.  பாவத்தினால் நுழைந்த அவபக்தியை நீக்குவதற்காகத் தேவன் ஒரு திட்டத்தை வைத்திருந்தார்.  அதுதான் “ஸ்திரீயின் வித்து.

மனிதனை உண்டாக்கின தேவன்¸ தானே ஒரு மனிதனாகக் கன்னியின் வயிற்றில் உற்பவித்துப் பிறந்து¸ மனிதனின் மீறுதலினால் வந்த பாவத்தைத் தன்மேல் ஏற்றுக்கொண்டு¸ மனிதனுக்குப் பாவமன்னிப்பையும்¸ பரிசுத்தத்தையும்¸ மெய்யான தேவபக்தியையும் கொடுப்பதே அத்திட்டம்.

பாவஞ்செய்த பின்னர்¸ தேவன் ஆதாமையும்¸ அவன் மனைவியாகிய ஏவாளையும் தோட்டத்திலிருந்து வெளியேற்றினார்.  ஏனென்றால் நன்மை¸ தீமை அறியத்தக்க கனியைப் புசித்து சாவை ஏற்றுக்கொண்ட மனிதன் அந்தத் தோட்டத்தின் நடுவிலுள்ள ஜீவவிருட்சத்தின் கனியையும் பறித்துப் புசித்து என்றென்றும் தீமை செய்கிறவனாய் வாழ்ந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டாலும்¸ தேவனுடைய சமூகத்திலிருந்து (பிரசன்னத்திலிருந்து) அவர்கள் முழுவதுமாகத் தள்ளப்படவில்லை.  ஆனாலும்¸ பாவத்தினிமித்தம் முன்புபோல் தேவனோடு அவர்களால் உறவாட முடியவில்லை.  தேவனை விட்டு சற்றே தூரமாய்ப் போய்விட்டார்கள்.  பாவம் தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே பிரிவினையை உண்டுபண்ணிற்று.  ஆகவே¸ பக்தி குறையத்தொடங்கியது.


காயீன்¸ ஆபேல்:

“ஆதாம் தன் மனைவியாகிய ஏவாளை அறிந்தான்;  அவள் கர்ப்பவதியாகி¸ காயீனைப் பெற்று¸ கர்த்தரால் ஒரு மனுஷனைப் பெற்றேன் என்றாள்.

பின்பு அவனுடைய சகோதரனாகிய ஆபேலைப் பெற்றாள்; ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான்¸ காயீன் நிலத்தைப் பயிரிடுகிறவனானான்.”  (ஆதியாகமம் 4: 1¸2)

பாவத்தின் விளைவினால் ஆசீர்வாதத்தையும்¸ தேவனோடு உள்ள நித்திய உறவையும் இழந்த மனிதனாய் ஆதாம் தன் குடும்ப வாழ்வை இந்தப் பூமியிலே தொடர ஆரம்பித்தான்.  ஆதாமுக்குக் குமாரர்கள் பிறந்தார்கள்.  அவர்கள் பெயர் காயீன்¸ ஆபேல் என்பன.  காயீன் மூத்தவன்¸ ஆபேல் இளையவன். காயீனுக்குள் அவபக்தி காணப்பட்டது. ஆனால்¸ ஆபேலோ தேவபக்தியுள்ளவனாகக் காணப்பட்டான்.

ஒருநாள் அவர்கள் இருவரும் தேவனுக்கு நன்றிக் காணிக்கை படைக்க வந்தார்கள்.  தேவன் ஆபேலையும்¸ அவன் காணிக்கையையும் அங்கீகரித்தார்.  ஆனால் காயீனை அவர் அங்கீகரிக்கவில்லை. ஏனென்றால் அவனுடைய இருதயம் தேவனுக்கு முன்பாக செம்மையானதாக இருக்கவில்லை.

தன்னையும் தன் காணிக்கையையும் தேவன் அங்கீகரிக்காததை காயீன் கண்டபோது¸ அவனுக்குள் எரிச்சல் ஏற்பட்டது.  அவன் தன் தம்பியாகிய ஆபேலைப் பகைத்தான்.  பின்பு ஒருநாள் அவர்கள் இருவரும் தனித்திருக்கையில்¸ காயீன் ஆபேலுக்கு விரோதமாக எழும்பி அவனைக் கொலை செய்தான்.

0 comments:

Post a Comment