Welcome to FutureForU Literature Service!

"There is surely a future hope for you, and your hope will not be cut off." (Proverbs 23:18)

The main motive of "FutureForU Literature Service" is to reach every person individually for Christ through literature. All the articles and resources available in this blog will help its visitor to have a bright future by knowing God and his ways.

Tuesday, 29 December 2020

ஆதியில் இருந்தவர் இயேசு!

அத்தியாயம் 2

(இயேசு கிறிஸ்துவின் அதிசய பிறப்பு!)

ஆதியிலே வார்த்தை இருந்தது¸ அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது¸ அந்த வார்த்தை தேவனாயிருந்தது.  அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.


        அவருக்குள் ஜீவன் இருந்தது¸ அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.  அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.” (யோவான் 1:1-5)
        ஆதியிலே வார்த்தை இருந்தது என்ற வசனம் யோவான் சுவிசேஷம் முதலாம் அதிகாரத்தில் வருகிறது.  யோவான் சுவிசேஷம் எல்லா ஜனங்களும் இயேசுவை அறிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு எழுதப்பட்ட புத்தகம் ஆகும்.  
        யோவான் என்ற சீஷன் இயேசுவை ஆதியில் பிதாவோடு (அகிலத்தையும் சிருஷ்டித் தவர்) இருந்தவராகக் கண்டார்.  ஆதி என்ற பதத்திற்கு ஆரம்பம் என்று பொருள். அது இந்த உலகம் தோன்றின காலகட்டத்தைக் குறிக்கிறது.  இந்த உலகம் தோன்றி சுமார் ஆறாயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கும் என்று கணக்கிடப்படுகிறது.

        இயேசு மனிதனாய் அவதரித்து ஈராயிரம் ஆண்டுகள்தான் ஆகிறது.  ஆனால் அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்¸ தேவனா யிருந்தார். ஆதியிலே தேவன் வானத்தையும்¸ பூமியையும்¸ அதிலுள்ள குடிகளையும் சிருஷ்டித்தபொழுது இயேசுவும் அங்கே இருந்தார்.  ஆம்¸  இயேசுவின் மூலமாய்த்தான் இந்த உலகமும்¸ அதிலுள்ள யாவும் உண்டாக்கப்பட்டது.
        ஆதியிலே தேவன் வானத்தையும்¸ பூமியையும் சிருஷ்டித்தார்.  பூமியானது ஒழுங்கின்மையும்¸ வெறுமையுமாய் இருந்தது;  ஆழத்தின்மேல் இருள் இருந்தது...” (ஆதியாகமம் 1:1¸ 2).

        இந்த உலகத்தைச் சிருஷ்டிப்பதற்குத் தேவன் தம்முடைய வார்த்தையை ஆதாரமாகப் பயன்படுத்தினார் என்று ஆதியாகமம் முதல் அதிகாரத்தில் பார்க்கிறோம். ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்த இந்தப் பூமியை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவன் தம்முடைய வார்த்தையை உபயோகித்தார்.
        வார்த்தை என்பது ஒருவரது எண்ணம் மற்றும் சிந்தையின் வெளிப்பாடாகும். வார்த்தையின் மூலமாக நாம் நம்முடைய எண்ணங்கள்¸ திட்டங்கள்¸ கருத்துக்கள்¸ கட்டளைகள்¸ மற்றும் விருப்பங்களை வெளிப்படுத்துகிறோம். அதைப்போலவே காணக் கூடாத மிகப்பெரிய இறைவன் தன்னுடைய வல்லமையை¸ உருவாக்கும் சக்தியை¸ ஆற்றலை வெளிப்படுத்தத் தன்னுடைய வார்த்தையைப் பயன்படுத்தினார்.  அந்த வார்த்தைதான் இயேசு.

ஞானமாயிருந்த இயேசு!


        கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் (ஞானமாகிய இயேசு) தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.  பூமி உண்டாகுமுன்னும்¸ ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன். ஆழங்களும்¸ ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன்.  

        மலைகள் நிலைபெறுவதற்கு முன்னும்¸ குன்றுகள் உண்டாவதற்கு முன்னும்¸ அவர் பூமியையும் அதின் வெளிகளையும்¸ பூமியிலுள்ள மண்ணின் திரள்களையும் உண்டாக்கு முன்னும் நான் ஜநிப்பிக்கப் பட்டேன்.

        அவர் வானங்களைப் படைக்கையில் நான் அங்கே இருந்தேன்; அவர் சமுத்திர விலாசத்தை வட்டணிக்கையிலும்¸ உயரத்தில் மேகங்களை ஸ்தாபித்து¸ சமுத்திரத்தின் ஊற்றுக்களை அடைத்துவைக்கையிலும்¸ சமுத்திர ஜலம் தன் கரையைவிட்டு மீறாதபடிக்கு அதற்கு எல்லையைக் கட்டளையிட்டு¸ பூமியின் அஸ்திபாரங்களை நிலைப்படுத்துகையிலும்¸ நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்;
        நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியா யிருந்து¸ எப்பொழுதும் அவர் சமூகத்தில் களிகூர்ந்தேன். அவருடைய பூவுலகத்தில் சந்தோஷப்பட்டு¸ மனுமக்களுடனே மகிழ்ந்துகொண்டிருந்தேன்.”  (நீதிமொழிகள் 8:22 - 31)

        இந்த வசனங்களில் ஆண்டவராகிய இயேசுவை ஞானத்திற்கு ஒப்பிட்டுச் சொல்லப் பட்டிருக்கிறது.  பிதாவாகிய தேவன் இந்த உலகத்தைச் சிருஷ்டிப்பதற்கு¸ அதை வடிவமைப்பதற்குத் தம்முடைய ஞானத்தைப் பயன்படுத்தினார். அந்த ஞானம்தான் இயேசு. ஆதியிலே – அதாவது சிருஷ்டிப்பின் நாளிலே இயேசு பிதாவோடுகூட அவருடைய ஞானமாக¸ வார்த்தையாக இருந்து சிருஷ்டிப்பிலே பங்கு பெற்றார்.  
        பிதா தம்மை வெளிப்படுத்த¸ தம்முடைய சிருஷ்டிப்பின் வேலையைச் செய்துமுடிக்க தன்னுடைய பிள்ளையாகிய இயேசுவை — ஞானமும்¸ வார்த்தையுமாய் இருந்த அவரைப் பயன்படுத்தினார்.

மானிடனான இயேசு!


        அந்த வார்த்தை மாம்சமாகி¸ கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்த வராய்¸ நமக்குள்ளே வாசம்பண்ணினார்;  அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது.” (யோவான் 1:14)

ஆதியிலே வார்த்தையாய்¸ ஞானமாய் இருந்த இயேசு¸ மாமிசத்தில் வெளிப்பட்டார் (மனிதனானார்). அதுதான் கிறிஸ்துமஸ்.  இயேசு என்ற பெயருக்கு இரட்சகர் என்பது பொருள். அதாவது மனிதனின் பாவங்களைப் போக்கி அவனைக் காப்பவர் என்பது அதின் அர்த்தம். இயேசு நம்மைப் பாவத்திலிருந்தும்¸ சாபத்திலிருந்தும்¸ வியாதியிலிருந்தும் விடுவித்துக் காக்கவே மனிதனாக அவதரித்தார்.

        அவரைக் குறித்து வேதம் இவ்வாறாகச் சொல்லுகிறது: “உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.  அவர் உலகத்தில் இருந்தார்¸ உலகம் அவர் மூலமாய் உண்டாயிற்று¸ உலகமோ அவரை அறியவில்லை.  அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார்¸ அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

        அவருடைய நாமத்தின்மேல் விசுவாச முள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ¸ அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி¸ அவர்க ளுக்கு அதிகாரங்கொடுத்தார்.”  (யோவான் 1:9-12)

        ஆம்¸  இயேசு உலகத்திற்கு ஒளியா யிருக்கிறார்.  இருள் என்பது  இந்த  உலகத்தில்  காணப்படுகிற  பாவம்¸  சாபம்¸  அநியாயம்¸ அக்கிரமம் மற்றும் மனிதனைக் கெடுக்கக்கூடிய அத்தனை செயல்களையும் குறிக்கிறது.  இயேசுவை நம்பி அவரை தெய்வமாக ஏற்றுக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் வெளிச்சமாக இருக்கிறார்.  அவர்களுடைய பாவங்களை மன்னிக்கிறார்¸ சாபங்களை மாற்றுகிறார்¸ வியாதி மற்றும் வேதனைகளை நீக்கிப்போடுகிறார்.

Monday, 28 December 2020

வேறே தேவர்கள்!

அன்றன்றுள்ள அப்பம்
(டிசம்பர் 29 செவ்வாய்க்கிழமை 2020)

"என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்" (யாத். 20:3).


கர்த்தரே உங்களுடைய தேவன். வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர் அவர்தான். காணப்படுகிறவைகள், காணப்படாதவைகள் எல்லாவற்றையும் சிருஷ்டித்தவர் அவர்தான். உங்கள்மேல் அதிக அக்கறைக் கொண்டிருக்கிறவரும் அவர்தான். அவர் அன்போடு உங்களைப் பார்த்து, "என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்" என்கிறார்.

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரவேலர்மேல் கர்த்தர் மனதுருகினார். விக்கிரக வழிபாட்டிலிருந்து அவர்களை வேறுபடுத்தி, தம்முடைய சொந்த ஜனங்களாகத் தெரிந்து கொண்டு தன்னை வெளிப்படுத்தச் சித்தமானார். எகிப்தின் தெய்வங்கள் மேல் நியாயத்தீர்ப்பைக் கொண்டு வந்தார். எகிப்தின் மந்திரவாதிகள் மேல் தண்டனையை செலுத்தினார். பார்வோனுடைய கையில் இருந்த இஸ்ரவேலரை அவர் விடுவித்தபோது, இஸ்ரவேலர் மேல் மனதுருகி அவர்களுக்கு நீதியும் நியாயமும் செய்யச் சித்தமானார்.

இஸ்ரவேலர் ஏறக்குறைய நானூறு ஆண்டுகளாக எகிப்தில் கொத்தடிமைகளாகப் பணி புரிந்தார்கள். அவர்களுக்கு மறுக்கப்பட்ட சம்பளத்தை ஈடு செய்யும்படி, அவர்கள் புறப்படும்போது எகிப்தியரிடமிருந்து தங்கம், வெள்ளி, விலையுயர்ந்த ஆடைகளைக் கேட்டுப் பெற்றுக் கொண்டார்கள். அவர்கள் எகிப்தியரை கொள்ளையிட கர்த்தர் அனுமதித்தார் (யாத். 12:36). இதன் நிமித்தம் இஸ்ரவேலரிடம் ஏராளமான தங்கம் இருந்தது.

தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு மீட்கப்பட்டு, கானானுக்குச் செல்லும் வழியில், சிவந்த சமுத்திரத்தைக் கடந்த இஸ்ரவேலர், விக்கிரக ஆராதனை என்னும் வலையில் விழுந்தார்கள். மோசே சீனா மலையில் நியாயப்பிரமாணத்தைப் பெற்றுக் கொண்டிருந்தபோது, இஸ்ரவேல் மக்கள் தாங்கள் எகிப்திலிருந்து கொண்டு வந்த பொன்னணிகளை உருக்கி, பொற்கன்றுக்குட்டியை விக்கிரகமாகச் செய்து, அதை வணங்கத் துவங்கினார்கள். கர்த்தர் நன்மையாய் இருக்கும்படி கொடுத்த பொன்னைக் கொண்டு அவர்கள் தங்களுக்குத் தாங்களே கேடுண்டாக்கிக் கொள்ளும்படி விக்கிரகங்களைச் செய்து விட்டார்கள் (யாத்.32:1-4).

நீங்கள் இந்த உலகத்தில் மகிழ்ச்சியுடன், அனுபவிக்க அநேக மேன்மைகளைக் கர்த்தர் கொடுத்திருக்கிறார். அவைகள் கர்த்தருடைய சட்ட திட்டத்தின் கீழிருக்கும் போது ஆசீர்வாதமாயிருக்கும். பொன்னை கர்த்தர் உண்டாக்கினார்; பணத்தையும் கர்த்தர்தான் உண்டாக்கினார். பணத்தை ஊழியத்திற்கு பயன்படுத்தலாம். பணத்தை செலவழித்து ஆத்துமாக்களை ஆதாயப்படுத்தலாம். ஆனால் இந்த பொன்னும், பணமும் பொருளாசையாக மாறும்போது விக்கிரகங்களாக மாறிவிடுகின்றன. கிறிஸ்துவைவிட நீங்கள் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அவை விக்கிரகங்களாக மாறுகின்றன.

உங்களுக்கு உணவு அவசியம்! ஆனால் அதுவும் அளவுக்கு மீறும்போது விக்கிரகமாகி விடுகிறது. அதுவே உபவாசத்திற்கும், ஜெபத்திற்கும் தடையாய் அமைந்து விடுகிறது. தேவபிள்ளைகளே, உங்களுக்கு விக்கிரங்களை நீங்களே உண்டாக்கிக் கொள்ளாதேயுங்கள்.

நினைவிற்கு:- "பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக் கொள்வீர்களாக. ஆமென்" (1 யோவா. 5:21).

Thursday, 24 December 2020

அதிசயமானவர் இயேசு!

 அத்தியாயம் 1

(இயேசு கிறிஸ்துவின் அதிசய பிறப்பு!)


“நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்;  கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்;  அவர் நாமம் அதிசயமானவர்¸ ஆலோசனைக் கர்த்தா¸ வல்லமையுள்ள தேவன்¸ நித்திய பிதா¸ சமாதானப்பிரபு எனப்படும்.”  (ஏசாயா 9:6)

இயேசுகிறிஸ்துவின் பிறப்பு மற்ற மனிதர்களின் பிறப்பைவிட பலவிதங்களில் வித்தியாசமானதாக இருந்தது.  ஏனென்றால் அவர் தேவ குமாரன்.  அவர் மாம்ச உருக்கொண்டு மனிதனாக அவதரித்ததினால் அவர் மனுஷ குமாரன் என்றும் அழைக்கப்பட்டார்.  

இயேசுகிறிஸ்துவின் பிறப்பின் மகத்துவத்தை கீழ்க்காணும் மூன்று காரியங்களிலிருந்து நாம் அறிந்துகொள்ளலாம்.  முதலாவதாக அவருடைய பிறப்பு முன்னறிவிக்கப்பட்ட ஒன்று.  இரண்டாவதாக அவருடைய பிறப்பு சரித்திரப்பூர்வமான ஒன்று.  மூன்றாவதாக¸ அவருடைய பிறப்பு அதிசயமானதும்¸ தெய்வீகத் தன்மையுள்ளதுமாயிருந்தது.

முன்னறிவிக்கப்பட்ட இயேசுவின் பிறப்பு:

இயேசுகிறிஸ்துவின் பிறப்பு பல நூற்றாண்டுகளுக்கு முன்னதாகவே தீர்க்கதரிசனமாகக் கூறப்பட்ட (முன்னறிவிக்கப்பட்ட) ஒரு சம்பவம்.  இயேசு யூதா கோத்திரத்தில் (யூதர்கள் வம்சத்தில்) பிறப்பார் என்று கி.மு. 1689-ம் ஆண்டில் யாக்கோபு தீர்க்கதரிசனமாய்க் கூறியுள்ளார் (ஆதியாகமம் 49:10). 

இயேசு இஸ்ரவேல் தேசத்தில் ஒரு நட்சத்திரம் உதிப்பதுபோல உதிப்பார் என்று பிலேயாம் என்ற தீர்க்கதரிசி கி.மு. 1452-ம் ஆண்டில் அறிவித்திருக்கிறார் (எண்ணாகமம் 24:17).

இயேசு ஒரு தெய்வீகப் பிறவியாகக் கன்னிகையின் மூலம் பிறப்பார் என்றும்¸ தாவீது என்னும் அரசனின் சந்ததியில் பிறப்பார் என்றும் ஏசாயா தீர்க்கதரிசியினால் கி.மு. 713-ல் அறிவிக்கப்பட்டது (ஏசாயா 7:14¸ ஏசாயா 9:6¸7).  

இயேசு உலகின் மத்திய தரைக்கடல் பகுதியிலுள்ள யூதேயா தேசத்திலிலுள்ள “பெத்லகேம்” என்ற சிற்றூரில் பிறப்பார் என்று மீகா என்ற தீர்க்கதரிசி கி.மு. 710-ம் ஆண்டில் அறிவித்தார் (மீகா 5:2).

இந்த வேத வசனங்களையெல்லாம் நாம் சற்று சிந்தித்துப் பார்ப்போமானால் இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பு தற்செயலாக நடந்த சம்பவமன்று.  அது நம்மை உண்டாக்கிய தேவனால் முன்குறிக்கப்பட்ட ஒன்று.  ஆதியிலே திட்டம்பண்ணப்பட்ட ஒன்று.

ஆதியிலே தேவனோடுகூட சிருஷ்டிப்பிலே பங்கு பெற்ற இயேசு¸ பிதாவின் வார்த்தையை நிறைவேற்ற சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு மாம்சமானார் (மனிதனானார்).  இயேசு இந்த உலகத்திற்கு வரும்படி தன்னை அர்ப்பணித்த பொழுது இவ்வாறாகக் கூறினார்: “பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல்¸ என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரண பலியையும் நீர் கேட்கவில்லை.

அப்பொழுது நான்¸  இதோ¸ வருகிறேன்¸ புஸ்தகச்சுருளில் என்னைக் குறித்து எழுதியிருக்கிறது; என் தேவனே¸ உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்;  உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.” (சங்கீதம் 40:6-8).  ஆகவே¸ இயேசுவினுடைய பிறப்பு தேவனுடைய முன்னறிவிப்பின்படியே நடைபெற்ற ஒன்றாகும்.

சரித்திரப்பூர்வமான இயேசுவின் பிறப்பு!

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை மையமாக வைத்து உலக சரித்திரம் கி.மு. என்றும் கி.பி. என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது.  இயேசுவின் பிறப்பை அன்று உலகிற்கு வெளிப்படுத்த ஒரு வால்நட்சத்திரம் தோன்றியது.

கி.மு.5-க்கும்¸ கி.மு.2-க்கும் இடைப்பட்ட காலத்தில் எகிப்திய மாதங்களின் தொடக்கமாகிய மெசொரி மாதத்தில் அதிகாலையில் மிகவும் பிரகாசமான வால் நட்சத்திரம் பூமிக்கு மிகவும் அருகில் வந்ததாக சரித்திர ஏடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

"மெசொரி" என்ற வார்த்தைக்கு “ஒரு அசரகுமாரனின் பிறப்பு” என்று அர்த்தமாம்.  டயோனிசியஸ் எக்சிகஸ் என்பவர் உருவாக்கிய சரித்திர நாட்காட்டியை வைத்து கணக்கிட்ட வேதஆராய்ச்சியாளர்கள் கி.மு. 4-ல் இயேசு பிறந்ததாகக் கணக்கிடுகின்றனர். 

இயேசு பிறந்த காலத்தில் வாழ்ந்த வானசாஸ்திரிகள் யூதேயா தேசத்தில் ஒரு இராஜா பிறந்திருக்கிறார் என்று சொல்லி யூதேயா தேசத்திற்குச் சென்று அங்குள்ள இராஜாவின் அரண்மனையில் விசாரித்தனர்.  ஆனால் அங்கு அவரைக் காணாமல் அவரைத் தேடி விசாரித்து அவர் யூதேயாவிலுள்ள பெத்லகேம் என்ற சிற்றூரில் பிறந்திருக்கிறார் என்று கண்டு அவரைப் பணிந்துகொண்டனர் (மத்தேயு 2:1-12).

அதிசயமான இயேசுவின் பிறப்பு!

இயேசுகிறிஸ்து அதிசயமானவர்.  அவர் பிறப்பு ஓர் அதிசயம்.  ஏனென்றால்¸ இந்த உலகத்தில் ஒரு மனிதனும் பிறக்காத விதத்தில் அவர் பிறந்தார்.  கன்னிகையின் வயிற்றில் உருவாகிப் பிறந்தார்.  இது ஓர் அதிசயம்.

பொதுவாக¸ இந்த உலகத்தில் ஒரு குழந்தை பிறப்பதற்கு ஓர் பொற்றோர் அவசியம் (ஒரு ஆண் மற்றும் பெண்). இவர்கள் இருவருடைய மாம்சம் மற்றும் இரத்தத்திலிருந்து பிறப்பதுதான் ஒரு குழந்தை.  ஆனால்¸ இந்த உலகத்தில் ஒரே ஒரு குழந்தை மாத்திரம் இதற்கு விதிவிலக்கு.  அதுதான் பாலகனாகிய இயேசுகிறிஸ்து!

ஒரு புருஷனை அறியாத கன்னிகையிடம் இயேசு பிறந்தது அவர் அதிசயமானவர் என்றும் தெய்வீகத்தன்மை உடையவர் என்பதையும் வெளிப்படுத்துகிறது.  இயேசுவின் தாயாகிய மரியாளும் (மிரியாம்)¸ அவருடைய வளர்ப்புத் தந்தையாகிய யோசேப்பும் பாலஸ்தீன நாட்டிலுள்ள நாசரேத் ஊரைச் சேர்ந்தவர்கள்.  அவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.  

யூதர்களுடைய வழக்கத்தின்படி நிச்சயம் செய்யப்பட்ட ஒரு ஆணுக்கும்¸ பெண்ணுக்கு மிடையே  மூன்று கட்டங்களாக ஒப்பந்தங்கள் செய்யப்படுகிறது.  அவையாவன:  முதலாவது கடடமாக சிறுபிராயத்தில் இன்னாருக்கும் இன்னாருக்கும் திருமணம் செய்யப்படும் என்று பெற்றோர்களுக்கிடையே ஒப்பந்தம் செய்து கொள்ளப்படுகிறது.

இரண்டாவது கட்டமாக¸ பிள்ளைகள் திருமண பருவத்தை அடையும்போது இருபாலரு டைய சம்மதத்தைக் கேட்டறிந்து ஒப்பந்தம் செய்துகொள்ளுவார்கள்.  

மூன்றாவது கட்டமாக¸ திருமணம் நடைபெறவிருக்கும் ஒரு ஆண்டுக்கு முன்பாக சமுதாய மக்களின் முன்னிலையில் இரு வீட்டாரும் ஒப்பந்தம் செய்துகொள்வார்கள்.  நிச்சயிக்கப்பட்ட பெண் அந்த ஒரு வருடகால இடைவெளியில் தனது கன்னித்தன்மையைக் காத்துக்கொள்ளவேண்டும்.

ஒருவேளை அவள் தன் தவறான நடக்கையினால் கர்ப்பவதியானால்¸ அந்த ஒருவருட இடைவெளியில் அது தெரியவரும் போது¸ யூத வேதச் சட்டப்படி நிச்சயிக்கப்பட்ட மணமகன் அவளோடு செய்த நிச்சயதார்த்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு வேறொரு பெண்ணை நிச்சயித்துத் திருமணம் செய்து கொள்ள  உரிமையுண்டு.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் மரியாள் கர்ப்பவதியானாள் என யோசேப்புக்கு அறிவிக்கப்பட்டது.  ஆகவே யோசேப்பு மரியாளை அவமானப்படுத்த மனதில்லாமல் இரகசியமாகத் தள்ளிவிட மனதாயிருந்தான்.  ஆனால் யோசேப்பு நீதிமானாயிருந்தபடியினால் அவன் மரியாளைத் தள்ளிவிடுவதைத் தேவன் விரும்பவில்லை.  ஆகவே¸ பிதாவாகிய தேவன் சொப்பனத்திலே ஒரு தேவதூதனை யோசேப்பினிடத்தில் அனுப்பி அவனுக்கு அறிவுரை கூறினார்: “…தாவீதின் குமாரனாகிய யோசேப்பே¸ உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக் கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.

அவள் ஒரு குமாரனைப்  பெறுவாள்¸ அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்… 

யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து¸ கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக் கொண்டு¸ அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து¸ அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.” (மத்தேயு 1: 20 – 25)


Sunday, 6 December 2020

அவபக்தியுள்ள காயீன்!

அத்தியாயம் 4

(தேவ பக்தியும்¸ அவ பக்தியும்!)


“பொல்லாங்கனால் உண்டாயிருந்து தன் சகோதர னைக் கொலைசெய்த காயீனைப் போலிருக்கவேண்டாம்;  அவன் எதினிமித்தம் அவனைக் கொலைசெய்தான்?  தன் கிரியைகள் பொல்லாதவைகளும்¸ தன் சகோதரனுடைய கிரியைகள்     நீதியுள்ளவைகளுமாயிருந்ததினிமித்தந் தானே.” (1 யோவான் 3:12)

“இவர்களுக்கு ஐயோ!  இவர்கள் காயீனுடைய வழியில் நடந்து¸ பிலேயாம் கூலிக்காகச் செய்த வஞ்சகத்திலே விரைந்தோடி¸ கோரா எதிர்த்துப் பேசின பாவத்திற்குள்ளாகி¸ கெட்டுப்போனார்கள்.”  (யூதா 1:11)

காயீனைக் குறித்து வேதம் சொல்லுகிறது:

1. அவன் பொல்லாங்கனால் (சாத்தானால்) உண்டானவன்.  அதாவது காயீன்¸ ஆதாமுக்கும் ஏவாளுக்கும் மூத்தமகனாகத் தேவனால் கொடுக்கப்பட்டிருந்தாலும்¸ அவன் பொல்லாங்கனாகிய சாத்தானுக்கு இடங்கொடுத்து அவனுடைய பிள்ளையானான்.

2. அவன் கெட்ட வழியில் நடக்கிறவனாய்க் காணப்பட்டான்.  தன்னையும் தன் காணிக்கையையும் தேவன் அங்கீகரிக்காததை அவன் கண்டபோது¸ அவனுக்குள் எரிச்சல் உண்டானது; அவன் முகநாடி வேறுபட்டது.

3. அவன் நன்மை செய்வதைக் காட்டிலும் தீமை செய்வதையே தெரிந்துகொண்டான். அவனுடைய கிரியைகள் (செய்கைகள்) பொல்லாதவைகளாய் இருந்தன.  இதினிமித் தம் அவன் தன் தம்பியாகிய ஆபேலைக் கொலை செய்தான்.

ஆதாமின் முதல் தலைமுறையிலேயே துணிகரமான பாவமாகிய “கொலை” காணப்பட்டது. பாவத்தின்மேல் பாவத்தை மனிதன் செய்ய ஆரம்பித்து விட்டான்.  இதினிமித் தம் மனிதன் தேவனோடுள்ள ஐக்கியத்தை (உறவை) முற்றிலும் இழக்க நேர்ந்தது.  தேவ சமூகத்தை இழந்த காயீன் பக்தியற்ற ஒரு சந்ததியின் தகப்பனானான். பக்திமானும்¸ நீதிமானுமாகிய ஆபேலுடைய சந்ததி இவ்வுலகை விட்டு மறைந்தது.

காயீனின் வழிநடந்த லாமேக்கு!

“காயீன் தன் மனைவியை அறிந்தான்; அவள் கர்ப்பவதியாகி¸ ஏனோக்கைப் பெற்றாள்;  அப்பொழுது அவன் (காயீன்) ஒரு பட்டணத்தைக் கட்டி¸ அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான்.

ஏனோக்குக்கு ஈராத் பிறந்தான்; ஈராத் மெகுயவேலைப் பெற்றான்;  மெகுயவேல் மெத்தூசவேலைப் பெற்றான்;  மெத்தூசவேல் லாமேக்கைப் பெற்றான்.

லாமேக்கு இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணினான்;  ஒருத்திக்கு ஆதாள் என்று பேர்;  மற்றொருத்திக்குச் சில்லாள் என்று பேர்.” (ஆதியாகமம் 4:17¸18¸19)

“லாமேக்கு தன் மனைவிகளைப் பார்த்து: ஆதாளே¸ சில்லாளே¸ நான் சொல்வதைக் கேளுங்கள்; லாமேக்கின் மனைவிகளே¸ என் சத்தத்துக்குச் செவி கொடுங்கள்;  எனக்குக் காயமுண்டாக ஒரு மனுஷனைக் கொன்றேன்;  எனக்குத் தழும்புண்டாக ஒரு வாலிபனைக் கொலை செய்தேன்;”  (ஆதியாகமம் 4: 23)

ஆபேலைக் கொலைசெய்த காயீனுடைய சந்ததியிலே ஐந்தாம் தலைமுறையிலே பிறந்தவர் லாமேக்கு.  இந்த லாமேக்கு தன் முற்பிதாவாகிய காயீனுடைய வழியில் நடந்து தனக்குக் காயமுண்டாக்கின¸ தனக்குத் தழும்பு உண்டாக்கின ஒரு வாலிபனைக் கொலை செய்தான்.  அதைத் தன் மனைவிமார்களும் அறிந்திருக்கும்படி செய்தான்.

லாமேக்கு காயீனுடைய வழியில் நடந்தது மட்டுமல்ல¸ தேவன் நியமித்த நியமமாகிய ஒருவனுக்கு ஒருத்தி என்ற பிரமாணத்தை மீறினான்.  முதன் முதலில் இரண்டு ஸ்திரீகளை விவாகம்பண்ணி குடும்ப வாழ்வை நடத்தினவர் இந்த லாமேக்கு.  காயீனுடைய சந்ததியினர் எதிர்கால சந்ததிக்கு தவறான வழிமுறைகளை வித்திட்டுச் சென்றனர்.  

நாட்கள் செல்லச் செல்ல ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளோடு வாழ்வது ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது.  இன்றைக்கும் காயீன் மற்றும் லாமேக்குடைய வழியில் நடக்கிற அநேகர் நம் நடுவிலும் உண்டு.

கொலை செய்வது¸ விபச்சாரம் மற்றும் வேசித்தனம் செய்வது மாம்சத்தின் கிரியையாயிருக்கிறது.  கலாத்தியர் 5-ஆம் அதிகாரம்¸ 19 முதல் 21 வரை உள்ள வசனங்களில் வேதம் மாம்சத்தின் கிரியைகள் எவை எவை என்று வகையறுக்கிறது:

“மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன்  அவையாவன: விபசாரம்¸ வேசித்தனம்¸ அசுத்தம்¸ காமவிகாரம்¸ விக்கிரகாராதனை¸ பில்லிசூனியம்¸ பகைகள்¸ விரோதங்கள்¸ வைராக்கியங்கள்¸ கோபங்கள்¸ சண்டைகள்¸ பிரிவினைகள்¸ மார்க்கபேதங்கள்¸

பொறாமைகள்¸ கொலைகள்¸ வெறிகள்¸ களியாட்டுகள் முதலானவைகளே;  இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.”

இப்படிப்பட்ட மாம்சத்தின் கிரியைகளில் ஏதாவது நம்மிடம் காணப்படுமானால்¸ நம்மால் தேவனுடைய ராஜ்யம் எனப்படுகிற பரலோகத்திற்குள் செல்லமுடியாது.  இப்படிப்பட்ட பாவங்களை விட்டு மனந்திரும்பி நாம் புதுசிருஷ்டியாய் மாறும்பொழுதுதான் பரலோக வாழ்வுக்குத் தகுதியுடையவர்களாகிறோம்.

காயீனின் சந்ததி அழிந்தது!

காயீன் தன் தம்பியாகிய ஆபேலைக் கொலை செய்த பாவத்திலிருந்து மனந்திரும்பவில்லை.  மாறாக அவன் தனக்கென்றும் தன் சந்ததிக்கென்றும் ஒரு பட்டணத்தைக் கட்டிக் கொண்டு அதிலே வாழ்ந்து சுகமாயிருக்க விரும்பினான்.  ஆகவே¸ அவன் எத்தனை ஆண்டு காலம் இந்த உலகத்தில் வாழ்ந்து மரித்தான் என்பதை வேதம் சுட்டிக் காட்டவில்லை.  

ஒருவேளை காயீனுடைய ஆத்துமாதான் மரித்து வேதனையுள்ள இடமாகிய பாதாளத்திற்குச் சென்ற முதல் ஆத்துமாவாக இருக்கலாம். மட்டுமல்ல¸ காயீனுடைய சந்ததி பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் முற்றிலுமாக அழிந்து மாண்டது.  ஆகவே¸ காயீன் மற்றும் லாமேக்கைப்போல வாழாமல் கர்த்தருக்குப் பயந்து அவர் கட்டளைகளின் வழிநடப்போம்.

காயீன் மற்றும் அவன் சந்ததியார் வாழ்ந்த காலம் மனச்சாட்சியின் காலம் எனப்படுகிறது.  அதாவது மனிதர் களின் மனச்சாட்சியில்¸ எது நல்லது எது கெட்டது என்ற அறிவைத் தந்து தேவன் அவர்களை நடத்தி வந்தார்.  மனச்சாட்சியின் மூலம் அவர்களோடு பேசினார்.  சிலவேளைகளில் நேரடியாகவும் பேசினார்.  

ஆனால்¸ அந்நாட்களில் வாழ்ந்த பக்தியற்ற மனுஷர்கள் அதற்குக் கீழ்ப்படியவில்லை. அதற்கு மாறாக அவர்கள் துணிகரமாக வாழ்ந்தார்கள். தங்கள் மனதும் மாம்சமும் விரும்பினதைச் செய்து தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தார்கள்.  ஆகவே தேவனால் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோனார்கள்.