Thursday, 23 June 2022

பக்தியுள்ள முற்பிதாக்கள்!

 அத்தியாயம் 5

(தேவ பக்தியுள்ள வாழ்வு!)


காயீன் கொலை செய்த ஆபேலுக்குப் பதிலாகத் தேவன் ஆதாமுக்கு இன்னொரு குமாரனைக் கொடுத்தார்.  அவன் பெயர் சேத்.  சேத் ஆதாமைப்போலவே தோற்றத் தில் காணப்பட்டான்.

சேத்தின் சந்ததி ஒரு பக்தியுள்ள சந்ததியாயிருந்தது.  சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்.  அவனுக்கு ஏனோஸ் என்று பெயரிட்டார்கள்.  அப்பொழுது மனிதர் தேவனுடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்.  ஆம்¸ தேவபக்தி மனிதர்களுக்குள் உண்டானது.

காயீன் ஆபேலைக் கொலை செய்வதற்கு முன்பு வரை தேவ பிரசன்னத்தை மனிதன் எளிதாக அனுபவித்து வந்தான்.  அதாவது தேவனோடு மனிதனால் எளிதாகத் தொடர்புகொள்ள முடிந்தது.  தேவன் மனிதனோடு பேசினார்; மனிதனும் தேவனோடு பேசினான். 

ஆனால்¸ மனிதன் துணிகரமாகப் பாவங்களைச் செய்ய ஆரம்பித்தது முதல் தேவசமூகம் அவனுக்குத் தூரமாக்கப்பட்டது.  அப்பொழுதுதான் மனிதன் தன் நிலையை உணர ஆரம்பித்தான்.

ஏனோஸ் பிறந்தபொழுது¸ மனிதனுக்குள் தன்னை உண்டாக்கின தேவனையும்¸ அவருடைய சமூகத்தையும் தேட வேண்டும் என்கிற உணர்வு உண்டானது.  அப்பொழுது அவன் தேவனைத் தொழ ஆரம்பித்தான்.  அவரை நமஸ்கரிக்கவும்¸ சேவிக்கவும் ஆரம்பித்தான்;  அவரை நோக்கிக் கூப்பிட ஆரம்பித்தான்.  அப்படித் தொழுதுகொள்ளும்பொழுது அவனுக்குத் தேவசமூகம் கிட்டியது.

நம்முடைய தேவனாகிய கர்த்தரை நாம் தொழுதுகொள்ளுகிற போதெல்லாம் அவர் நமக்குச் சமீபமாயிருக்கிறது போல¸ தேவனை இவ்வளவு சமீபமாய்ப் பெற்றிருக்கிற வேறே பெரிய ஜாதி எது?” (உபாகமம் 4:7).

தேவனோடு சஞ்சரித்த ஏனோக்கு!

ஏனோக்கு அறுபத்தைந்து வயதானபோது¸ மெத்தூசலாவைப் பெற்றான்.  ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின்¸ முந்நூறு வருஷம் தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்து¸ குமாரரையும் குமாரத்திகளையும் பெற் றான்.  ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம்.

ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருக்கையில் காணப் படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.” (ஆதியாகமம் 5: 21-24)

பக்தியுள்ள சந்ததியில்¸ ஏனோஸின் நான்காம்  தலை முறையில் பிறந்தவர் ஏனோக்கு.  இவர் இவருடைய முன்னோர்கள் எல்லோரையும்விட மிகவும் பக்தி நிறைந்தவராயிருந்தார். 

இந்த ஏனோக்கு குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுக் குமாரரையும்¸ குமாரத்திகளையும் பெற்றாலும்¸ தேவனோடு நெருங்கிய ஐக்கியம் கொண்டிருந்தார்.  தேவனுக்குப் பிரியமானவராய்க் காணப்பட்டார்.  ஆகவே தேவன் அவரை இந்த உலகை விட்டு மரணம் ஏற்படாமலேயே எடுத்துக்கொண்டார்.

ஆதாம் (930)¸ ஆபேல் என்பவர்களுடைய மரணங் களுக்குப் பின்பு¸ மரணத்தைக் காணாமலேயே எடுத்துக் கொள்ளப்பட்டவர் இந்த ஏனோக்கு தான்.  இவருக்குப் பின்னர் இந்தப் பூமியிலே மனிதர்கள் மிகவும் பலுகிப் பெருகத் தொடங்கினார்கள்.  அப்பொழுது பாவமும்¸ அவபக்தியும் மனிதர் களுக்குள் அதிகம் காணப்பட்டது.

நீதிமானாகிய நோவா!

பாவம் நிறைந்த பூமியில்¸ ஏனோக்குடைய மூன்றாம் தலை முறையில் தேவன் ஒரு நீதிமானைத் தோன்றப்பண்ணினார்.  அவர்தான் நோவா.  நோவா என்றால் ஆற்றுகிறவன் (ஆறுதல் செய்கிறவன்) என்று அர்த்தம்.  

ஆதாமின் பாவத்திற்குப் பின்¸ பாவத்தின் விளைவாக வந்த சாபத்தினால் பூமி தன் பலனைக் கொடாமலிருந்தது.  பூமியின்மேல் மழை பெய்யாதிருந்தது. அப்படிப்பட்ட வருத்தத்தின் மத்தியில் பிறந்தவர்தான் நோவா.  ஆனால்¸ அவருடைய பெயருக்கேற்ப அவர் அவருடைய பெற்றோர்களுக்கும்¸ அவருடைய சந்ததிக்கும்¸ இந்த முழு உலகத்திற்குமே ஆறுதலைக் கொண்டு வந்தார்.

நோவா அக்காலத்திலே வாழ்ந்த மனிதர்களுக்குள் (பாவம் பெருகின நாட்களிலுள்ளவர்களில்) பக்திமானும்¸ நீதிமானுமாயிருந்தார். மனிதர் களுக்குள் பக்தி குறைந்து¸ பாவம் பெருகினபடியினாலே¸ தாம் உண்டாக்கின மனு வர்க்கத்திற்காய்த் தேவன் மனஸ்தாபப்பட்டார்.  

மனிதன் நிமித்தம்; முழு உலகத்தையும்¸ அதிலுள்ள சகல ஜீவராசிகளையும் தண்ணீரினால் அழிக்கத் தேவன் தீர்மானித்தார். ஆனால்¸ நோவாவுக்கோ கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது.  அவனையும் சேர்த்து நீரில் அழிப்பதில் தேவனுக்கு விருப்பமில்லை.

நோவாவுடைய நாட்களில்தான் அவருடைய முன்னோர் களில் (பக்திமான்கள்) அநேகர் மரித்திருக்கின்றனர்.  அவருடைய முற்பிதாக்களாகிய ஏனோஸ் (905) முதல் ஏனோக்கு (365) வரைக்கும் இந்தக் காலக்கட்டத்தில்தான் மறைந்திருக்கிறார்கள்.  நோவாவுக்குக் குமாரர்கள் பிறந்த பிறகு¸ அவருடைய தகப்பனார் லாமேக்கும் (777) மரித்தார்.  அவருடைய தாத்தா மெத்தூசலா மட்டும் உயிரோடு இருந்தார்.

0 comments:

Post a Comment