Friday, 7 October 2022

ஆபிரகாமின் சந்ததி!

தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியிலே பிறந்து, தேவனால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டவர்தான் ஆபிரகாம்.  தேவன் அவரை அழைத்தபொழுது அவருக்குப் பிள்ளைகள் இல்லை. ஆனால் அவரிடத்தில் பக்தி இருந்தது.

"கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. 

நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.

உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்." (ஆதியாகமம் 12: 1-3)

ஆபிரகாமைத் தேவன் அழைத்த பொழுது, அவர் கல்தேயருடைய தேசத்திலுள்ள ஒரு ஊரிலே வசித்து வந்தார். தேவன் அவரை அங்கிருந்து அழைத்துத் தான் காண்பிக்கும் தேசத்துக்குப் போகும்படிக் கூறினார். உடனே ஆபிரகாம் தேவனுக்குக் கீழ்படிந்தார். அதாவது தான் தேவன்மேல் வைத்திருந்த விசுவாசத்தைத் தன் கிரியையில் (செயலில்) காண்பித்தார். அதினால் அவர் தேவனுக்கு முன்பாக நீதிமானாகக் காணப்பட்டார். மேலும், அவர், தன்னைப்போல் தேவனை விசுவாசிக்கும் அனைவருக்கும் தகப்பனாகவும் மாறினார். 

தேவன் ஆபிரகாமை அழைத்தபொழுது, அவருக்கு 75 வயதாயிருந்தது. ஆபிரகாம் தேவன் சொன்ன வார்த்தைகளை நம்பினார், விசுவாசித்தார். தன்னுடைய வயதையோ, தான் குழந்தையற்றவனாய் இருக்கிற நிலையையோ அவர் பார்க்கவில்லை.  தன்னை அழைத்த தேவனால் எல்லாம் கூடும் என்று விசுவாசித்தார்.

தேவன் அந்த விசுவாசத்தைச் சோதித்துப் பார்த்தார். 25 ஆண்டுகள் கடந்துபோனது. என்றாலும், ஆபிரகாம்- சாராள் தம்பதியினருக்குக் குழந்தை பிறக்கவில்லை. இந்த சூழ்நிலையிலும், ஆபிரகாம் தன்னுடைய விசுவாசத்தை விட்டுவிடவில்லை. அதிலே பலப்பட்டார்.

ஈசாக்கும், இயேசு கிறிஸ்துவும்!

ஆபிரகாம் 100 வயதானபோது, தேவன் அவருக்கு வாக்குப்பண்ணினபடியே ஒரு குமாரனைக் கொடுத்தார். அவனுக்கு 'ஈசாக்கு' என்று பெயரிடப்பட்டது. ஈசாக்கு என்றால் 'நகைப்பு' என்பது பொருள். ஆபிரகாம்-சாராள் என்கிற தாத்தாவுக்கும், பாட்டிக்கும் குழந்தையாக ஈசாக்கு பிறந்திருந்ததால் அது ஜனங்களுக்கு நகைப்பாயிருந்தது.

ஈசாக்கு தன் பெயருக்கேற்ப தன் பெற்றோருக்கும், உற்றாருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கிறவராயிருந்தார். ஆம், நம் தேவன் வாக்குப்பண்ணுகிறவர் மட்டுமல்ல, தான் சொன்னதைச் செய்ய வல்லவரும், உண்மையுள்ளவருமாய் இருக்கிறார்.

ஆபிரகாமைத் தேவன் சகலவிதத்திலும் ஆசீர்வதித்திருந்தார். அவர் ஒரு சீமானாயிருந்தார். அவருக்கு அநேக ஆடு, மாடுகளும், வெள்ளியும், பொன்னும் இருந்தது. அவருடைய வீட்டில் பிறந்த வேலைக்காரர்கள் மாத்திரம் 300க்கும் அதிகமானவர்கள். 

இந்த ஆபிரகாமுடைய சந்ததியில்தான் அநேக பக்திமான்களும், நீதிமான்களும் தோன்றினார்கள்; தலை சிறந்த ஞானிகளும், விஞ்ஞானிகளும் தோன்றினார்கள்; பெரிய பெரிய இராஜாக்கள் தோன்றினார்கள்.  அதுமாத்திரமல்ல, இவருடைய சந்ததியில்தான் தேவாதி தேவன் தாமே மனுஉருக்கொண்டு 'இயேசு' என்ற பெயரில் தோன்றினார். அவரே உலகச் சரித்திரத்தை இரண்டாகப் (கி.மு.-கி.பி.) பிரித்தவர். முழு மனுவர்க்கத்திற்கும் பாவமன்னிப்பாகிய மீட்பை உண்டுபண்ணினவர். இந்த முழு உலகத்திற்கும் ஆசீர்வாதத்தைக் கொண்டு வந்தவர்.

பக்தி வாழ்க்கைக்கு வழி - இயேசு!

"... இரத்தஞ் சிந்துதல் இல்லாமல் மன்னிப்பு உண்டாகாது" (எபிரெயர் 9:22) என்று வேதத்தில் எழுதியிருக்கிறது. ஜலப்பிரளயத்திற்குப் பின், இயேசு கிறிஸ்துவின் நாட்கள் வரையிலும் பலிகள் செலுத்தப்பட்டு வந்தன. அதாவது, இயேசு கிறிஸ்துவின் இரத்தத்திற்கு அடையாளமாக (நிழலாக) ஆடுமாடுகளின் இரத்தம் சிந்தப்பட்டது. 

ஆனால், சுமார் 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்து மனிதனாக அவதரித்து, மூன்றரை ஆண்டுகள் தன்னைத் தேடிவந்த மக்களுக்கு அநேக நன்மைகளைச் செய்து, சிலுவை மரத்தில் நமக்காகப் பலியாகித் தன் சொந்த இரத்தத்தைச் சிந்தினார்.

"...இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும்" (1 யோவான் 1:7) என்று வேதம் சொல்லுகிறது.  இயேசு கிறிஸ்து பாவமே செய்யாத பரிசுத்த தேவன். ஆகவே, அவருடைய இரத்தம் பாவமில்லாத பரிசுத்த இரத்தம். நமக்காகச் சிந்தப்பட்ட அவருடைய இரத்தத்தில்தான் பாவமன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. 

நாம் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டால் மட்டுமே, நாம் சொர்க்கம் என்கிற மோட்சத்திற்குள் சென்று வாழமுடியும். பாவங்களை மன்னிக்கிறவர் ஆண்டவர் இயேசு ஒருவர்தான். அவரிடம் நாம் நம் பாவங்களைச் சொல்லி மன்னிப்புக்கேட்டு, அவற்றை விட்டுவிடவேண்டும். அப்போது நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும்; பரலோக சந்தோஷம் நம்மை நிரப்பும். ஆமென்!

0 comments:

Post a Comment