Sunday, 10 July 2022

ஜலப்பிரளயம் - ஓர் நியாயத்தீர்ப்பு!

அத்தியாயம் 6

(தேவ பக்தியுள்ள வாழ்வு!)

நோவாவையும்¸ அவருடைய குடும்பத்தையும் பெரிய அழிவாகிய ஜலப்பிரளயத்திலிருந்து காப்பாற்ற நினைத்த தேவன்¸ பேழை (கப்பல்) ஒன்றைக் கொப்பேர் என்னும் மரத்தால் உண்டுபண்ண அவனுக்குக் கட்டளை கொடுத்தார். அதுதான் முதன் முதலில் கட்டப்பட்ட கப்பல்.  ஆனால்¸ ஜனங்களோ அதைப் பார்த்து நகைத்தனர்.  அவர்கள் தங்கள் பாவப் பழக்க வழக்கங்களை விட்டு மனந்திரும்பி¸ தங்களை உண்டாக்கின தேவனைத் தேட மனதில்லா திருந்தார்கள்.


நோவா பேழையைக் கட்டி முடித்த அந்த வருடத்தில் தானே அவருடைய தாத்தா மெத்தூசலாவும் (969) மரணமடைந்தார்.  அதே வருடத்தில்¸ தேவன் நோவாவையும்¸ அவருடைய முழுக் குடும்பத்தையும்¸ அவர்களோடுகூட சகல நாட்டு மிருகங்களிலும்¸ சகல காட்டு மிருகங்களிலும்¸ ஆகாயத்துப் பறவைகளிலும்¸ ஊரும் பிராணிகளிலும் ஒரு சில ஜோடிகளை பேழைக்குள் பிரவேசிக்கப்பண்ணினார். அதன்பின்பு பேழையின் கதவு அடைக்கப்பட்டது.

தேவன் வானத்தின் மதகுகளையும்¸ பூமியின் ஆழத்தின் ஊற்றுக் கண்களையும் திறந்துவிட்டார். 40 நாட்கள் இரவும் பகலும் பூமியின்மேல் மழை பெய்தது.  பூமியின் மேலுள்ள சகல மலைகளும்¸ உயரமான சகல சிகரங்களும் தண்ணீரால் மூடப்பட்டன.

ஜலப்பிரளயத்தினால் பூமியில் வாழ்ந்த மனிதன் முதல்¸ மிருக ஜீவன்கள் வரையிலும்¸ நாசியில் சுவாசமுள்ள யாவும் மாண்டுபோயின.  பாவம் நிறைந்த¸ அவபக்தியுள்ள உலகத்தைத் தேவன் தண்ணீரினால் அழித்தார். ஆனால்¸ நோவாவின் சந்ததியையோ தண்ணீரில் அழியாமல் காத்தார்.

வேதம் சொல்லுகிறது¸ “கர்த்தர் தேவபக்தியுள்ளவர்களைச் சோதனையி னின்று இரட்சிக்கவும்¸ அக்கிரமக்காரரை ஆக்கினைக்குள்ளானவர்களாக நியாயத்தீர்ப்பு நாளுக்கு வைக்கவும் அறிந்திருக்கிறார்” (2 பேதுரு 2:9) என்று.

ஆம்¸ ஜலப்பிரளயம் என்னும் நியாயத்தீர்ப்பிலே தேவன் நோவாவையும்¸ அவன் மனைவியையும்¸ அவன் மூன்று குமாரரையும் (சேம்¸ காம்¸ யாப்பேத்)¸ அவர்கள் மனைவிமார்களையும் (மொத்தம் 8 பேர்) காப்பாற்றினார். அவர்களாலே ஜலப்பிரளயத்திற்குப் பின்பு ஜனங்கள் பெருகத் தொடங்கி னார்கள்.

ஜலப்பிரளயத்திற்குப் பின்!

ஜலப்பிரளயத்திற்குப் பின்பு¸ தேவன் நோவாவையும் அவன் குமாரரையும் ஆசீர்வதித்து:  “நீங்கள் பலுகிப் பெருகி¸ பூமியை நிரப்புங்கள்” (ஆதியாகமம் 9:1) என்று சொல்லி ஆசீர்வதித்தார்.  அப்படியே அவர்களுடைய சந்ததி இந்தப் பூமியிலே பெருகத்தொடங்கியது.  நோவாவுடைய மூத்த குமாரன் யாப்பேத்¸ இரண்டாவது குமாரன் சேம்; இளையவன் காம்.

இவர்களில் முதல் இரண்டு பேரும் பக்தி உள்ளவர்களாய் இருந்தார்கள்.  ஆனால்¸ மூன்றாவது மகனாகிய காமுக்குள்ளே ஒருவித அவபக்தி காணப்பட்டது.  அவன் கெட்டநடக்கை உள்ளவனாயிருந்தான். ஆண் புணர்ச்சியாகிய பாவம் அவனிடத்திலும் அவன் சந்ததியினிடத்திலும் காணப்பட்டது. அதினால் அவன் தன் தகப்பனால் சபிக்கப்பட்டான். அவனுடைய சந்ததியில் சாபம் இருந்தது.

காமின் குமாரர்களில் ஒருவனாகிய கானான் பல ஜாதிகளுக்குத் தகப்பனானான்.  இந்தக் கானானுக்குள்ளும் அவன் சந்ததியாருக்குள்ளும் ஆண்புணர்ச்சியாகிய பாவம் மலிந்து கிடந்தது.  ஆகவே அவர்கள் வாழ்ந்த பட்டணங்களாகிய சோதோம்¸ கொமோரா ஆகியவை அக்கினியினாலும் கந்தகத்தினாலும் அழிக்கப்பட்டன.  பின் நாட்களில் காமின் சந்ததியார் வாழ்ந்து வந்த காமின் தேசமாகிய எகிப்து¸ மற்றும் கானான் முதலியன தேவனால் நியாயந்தீர்க்கப்பட்டு அழிவைக் கண்டன.  கானான் தேசம் முழுவதும் சேமின் சந்ததியாரால் யுத்தத்தில் பிடிக்கப்பட்டு இஸ்ரவேல் என்னும் தேசம் உருவானது.

சேமின் சந்ததி!

பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்து கொண்டார்...” (சங்கீதம் 4:3) என்று வேதம் சொல்லுகிறது.  ஆகவே¸ பக்தியுள்ளவர்களாகிய யாப்பேத்தையும்¸ சேமையும் தேவன் தெரிந்துகொண்டார்.  அவர்களை ஆசீர்வதித்தார்.  அவர்கள் இரண்டு பேருடைய சந்ததியுமே ஆசீர்வதிக்கப்பட்ட¸ பக்தியுள்ள சந்ததிகள்தான். அதிலும் தேவன் ஒரு சந்ததியை விசேஷமாகத் தெரிந்தெடுத்தார்.  அதுதான் சேமின் சந்ததி.

சேமின் சந்ததியில்தான் தேவாதி தேவன் மாம்சமாகி¸ ஸ்திரீயின் வித்தாகக் கன்னியின் வயிற்றில் வந்துதித்தார்.  இந்த முழு மனுக்குலத்தின் பாவத்தையும் தன்மேல் ஏற்றுக்கொண்டு¸ முழு உலகத்தையும் பக்தியுள்ள ஒரு சந்ததியாக மாற்ற விரும்பினார்.  ஆம்¸ அவர்தான் ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்து.

சேமுடைய சந்ததி பக்தியுள்ள சந்ததியாகவும்¸ தேவனால் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாகவும் இருந்தது.  நாட்கள் செல்லச் செல்ல¸ காலங்கள் மாற மாற அந்தச் சந்ததியிலும் உண்மையான தேவபக்தி குறையத் தொடங்கியது.  தேவ பக்தியை அடைவதற்கு மனிதன் குறுக்கு வழிகளை நாட ஆரம்பித்து விட்டான்.

விக்கிரக வழிபாடு மனிதனுக்குள் நுழையத் தொடங்கியது. மனிதன் தன்னை உண்டாக்கின தெய்வத்தை மறந்து¸ அந்நிய தேவர்களை நாட ஆரம்பித்துவிட்டான்; தனக்கென தெய்வங்களை உண்டாக்கிக் கொண்டான்.  அப்படிப்பட்ட கால கட்டத்தில் தான்¸ சேமுடைய சந்ததியில் 9-ம் தலைமுறையிலே பிறந்தவர் ஆபிரகாம் என்கிற ஒரு பக்தன்.

0 comments:

Post a Comment