Saturday, 29 August 2020

பக்தியுள்ள ஓர் சந்ததி!

 தேவபக்தியுள்ள சந்ததி!

(அத்தியாயம் 1)

அவர் ஒருவனையல்லவா படைத்தார்? ஆவி அவரிடத்தில் பரிபூரணமாயிருந்ததே¸ பின்னை ஏன் ஒருவனைப் படைத்தார்? தேவபக்தியுள்ள சந்ததியைப் பெறும்படிதானே. ...” (மல்கியா 2:15)

தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார்; அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாக அவர்களைச் சிருஷ்டித்தார்.” (ஆதியாகமம் 1:27)


ஆதியிலே தேவன் மனிதனைப் படைத்தபொழுது அவனைத் தன் சாயலின்படியேயும்¸ தன் ரூபத்தின்படியேயும் படைத்தார். அவனை மண்ணினாலே வனைந்து அவனுக்குள் தம் சுவாசத்தை ஊதினார். அப்பொழுது அவனுக்குள் ஜீவன் (ஆவியும்¸ ஆத்துமாவும்) வந்தது. அவன் ஜீவ ஆத்துமாவானான். அப்படி முதன் முதலில் உண்டாக்கப்பட்ட மனிதன்தான் ஆதாம்!

ஆதியிலே தேவனால் உண்டாக்கப்பட்டது ஒரே ஒரு மனிதன்தான். அநேகரல்ல. ஏனென்று தெரியுமா? ஏனென்றால்¸ அந்த ஒருவன் மூலமாய் பக்தியுள்ள சந்ததி இந்த உலகத்தில் தோன்றவேண்டுமென்பதற்காகத்தான்.

தேவன் ஆதாம் என்கிற ஒரு மனிதனுக்குப் பதிலாகப் பலரை உண்டுபண்ணியிருப்பாரென்றால்¸ பக்தியுள்ள ஜனக் கூட்டம் (வம்சம்) இந்த உலகத்தில் தோன்றியிருக்க முடியாது. அதற்கு மாறாக மனிதர்களுக்குள் அவபக்தியும்¸ அவ மரியாதையும்தான் காணப்பட்டிருக்கும். ஒவ்வொரு மனிதனும் தன் தன் மன விருப்பத்தின் படியேயும்¸ யோசனையின்படியேயும் நடந்திருப்பான். சமுதாயத்தில் ஒழுங்கு காணப்பட்டிருக்க முடியாது.

பக்தி என்றால் என்ன?

பக்தி என்பது மனிதன் தன்னை உண்டாக்கின தேவனிடத்தில் (சிருஷ்டிகரிடத்தில்) கொண்டிருக்கும் உறவைக் குறிக்கிறது. பக்தியுள்ள மனிதன் கீழ்க்காணும் குணாதிசயங்கள் உடையவனாயிருப்பான்:

1. தேவன் ஒருவர் உண்டென்று நம்புவான். அதாவது¸ தான் இயற்கையாக இந்த உலகத்தில் தோன்றிவிடவில்லை என்றும்¸ தன்னை உண்டாக்கின தேவன் ஒருவர் இருக்கிறார் என்றும் நம்புவான்.

2. தேவனோடு தினந்தோறும் உறவுகொள்ள விரும்புவான். அவருடைய சமூகத்தை (பிரசன்னத்தை) நித்தமும் தேடுவான்; அவரும் தன்னோடுகூட இருக்கவேண்டும் என்று வாஞ்சிப்பான்.

3. தேவனுக்குப் பிரியமான காரியங்களையே செய்ய நாடுவான். அவருக்குரிய கனத்தையும்¸ மரியாதையையும் அவருக்குக் கொடுப்பான்; அவரைத் தொழுதுகொள்ளவும் (நமஸ்கரிக்கவும்)¸ சேவிக்கவும் செய்வான்.

ஒருநாள் திருடன் ஒருவன் இரவு நேரத்தில் திருடு வதற்காக ஒரு வீட்டிற்குள் நுழைந்தான். அந்த வீட்டின் சொந்தக்காரரோ பக்தி நிறைந்தவர். அவர் கடவுள்மேல் நம்பிக்கை வைத்துவிட்டு நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருந்தார். அந்த வீட்டிற்குள் நுழைந்த திருடன் நேராக பீரோ உள்ள அறைக்குள் நுழைந்தான். பீரோவைத் திறந்து பணம் மற்றும் நகைகளை ஒரு மூட்டையில் கட்டினான்.

தன்னால் முடித்த அனைத்தையும் எடுத்துக் கொண்டு போகும் தருவாயில்¸ திடீரென அவனுக்கு வழக்கம்போல வரும் வயிற்று வலி வந்துவிட்டது. அந்த வயிற்று வலியை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. செய்வதறியாது திகைத்தான்.

வயிற்று வலியால் துடி துடித்துக்கொண்டிருந்த அவன் அந்தச் சுவற்றில் மாட்டப்பட்டிருந்த இயேசு கிறிஸ்துவின் படத்தைப் பார்த்தான். அவனுக்குள் ஒரு எண்ணம் எழுந்தது¸ “ஏன் இயேசுகிறிஸ்துவை ஒருமுறை கூப்பிட்டுப்பார்க்கக் கூடாது?” என்று. உடனே இயேசுவிடம் தன் பாவங்களை அறிக்கையிட்டான்: “இயேசுவே¸ என்னை மன்னியும். இந்த வயிற்று வலியிலிருந்து எனக்குச் சுகம் தாரும்; நான் இனித் திருடமாட்டேன்” என்று சொல்லித் தன் தவற்றை ஒப்புக்கொண்டான்.

உடனே அந்த வயிற்று வலி அவனை விட்டு நீங்கிற்று. தான் திருடிய எல்லாப் பொருட்களையும் அப்படியே போட்டுவிட்டுத் திரும்பிப் போனான். சந்தோஷமும்¸ சமாதானமும் அவனுக்குக் கிடைத்தது. என்னே பாக்கியம்

ஆம்¸ அந்தக் கள்ளனுக்குள் காணப்பட்டது ஒருவிதமான பக்தி. அதினால் அவனுக்குக் கிடைத்தது பாவமன்னிப்பும்¸ சரீர சுகமும்! இன்று நம்முடைய பக்தி எப்படிப்பட்டதாயிருக்கிறது என்று நாம் சற்று சிந்தித்துப் பார்ப்போமா?

பக்தியுள்ள முதல் குடும்பம்!

"தேவனாகிய கர்த்தர் மனுஷனை ஏதேன் தோட்டத்தில் அழைத்துக்கொண்டு வந்து¸ அதைப் பண்படுத்தவும் காக்கவும் வைத்தார்.

தேவனாகிய கர்த்தர் மனுஷனை நோக்கி: நீ தோட்டத்திலுள்ள சகல விருட்சத்தின் கனியையும் புசிக்கவே புசிக்கலாம்.

ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார். பின்பு¸ தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல¸ ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்" (ஆதியாகமம் 2:16-18)

தேவன் ஆதாமை உண்டாக்கி¸ அவனை ஏதேன் என்னும் தோட்டத்தில் வாழவைத்தார். அந்தத் தோட்டத்தில் அவனுக்குத் தேவையான சகலவிதமான கனிதரும் மரங்களையும் நாட்டியிருந்தார். அதோடுகூட தோட்டத்தின் நடுவிலே இரண்டுவிதமான மரங்களையும் வைத்திருந்தார். அதில் ஒன்று ஜீவவிருட்சம்; மற்றொன்று நன்மை தீமை அறியத்தக்க மரம்.

இப்படிப்பட்ட கனி விருட்சங்கள் நிறைந்த அந்தத் தோட்டத்தைப் பண்படுத்திப் பாதுகாக்கும் பணியை அவனுக்குக் கொடுத்தார். அதுமட்டுமல்ல¸ தான் உண்டாக்கின பறவைகள்¸ மிருகங்கள்¸ ஊரும் பிராணிகள்¸ கடல்வாழ் ஜந்துக்கள் ஆகிய யாவற்றையும் ஆளுகின்ற அதிகாரத்தையும் அவனுக்குக் கொடுத்தார்.

மேலும்¸ தேவன் ஆதாமுக்கு அவன் கைக்கொள்ளும்படிக்கு ஒரே ஒரு கட்டளையையும் கொடுத்தார். அந்தக் கட்டளை என்னவென்றால்¸ தோட்டத்திலுள்ள சகல கனிகளையும் அவன் பறித்துப் புசிக்கலாம். ஆனால்¸ அந்ததத் தோட்டத்தின் நடுவிலுள்ள மரமாகிய நன்மை தீமை அறியத்தக்க மரத்தின் கனியை மாத்திரம் அவன் புசிக்கக்கூடாது என்பதுதான். அதைப் புசிக்கும் நாளிலே அவன் சாகவே சாவான் என்பதாகவும் கூறினார்.

தாம் உண்டாக்கிய மனிதனாகிய ஆதாம் தனிமையாய் அந்தத் தோட்டத்தில் இருப்பது நல்லதல்ல என்று தேவன் கண்டு¸ அவனுக்கு ஒரு துணையை (பெண்ணை) அவன் விலா எலும்பிலிருந்து உண்டாக்கினார். அவள்தான் ஏவாள். அவளே ஜீவனுள்ள மனிதர்கள் அனைவருக்கும் தாயானவள். அவள் மூலமாய் இந்த உலகத்தில் சந்ததிகள் தோன்ற ஆரம்பித்தன.

ஆதாமும் ஏவாளும் தங்கள் இல்லற வாழ்க்கையை ஏதேன் தோட்டத்தில் சந்தோஷமாய் ஆரம்பித்தனர். ஒவ்வொருநாளும் அதிகாலையில் தேவனோடு உறவாடி மகிழ்ந்தனர். தேவ பக்தியுள்ள நல்ல குடும்பமாகத் திகழ்ந்தனர்.

ஒருநாள் ஏதேன் தோட்டத்திற்குள் சாத்தான் என்கிற சத்துருவானவன் பாம்பின் மூலமாக நுழைந்தான். தோட்டத்தின் ஒரு பகுதியில் ஏவாள் தனித்திருந்த பொழுது¸ அவளோடு பேசத்தொடங்கினான். அவளைத் தன் பொய் வார்த்தைகளினால் மயங்கப்பண்ணினான்.

சாத்தானால் வஞ்சிக்கப்பட்ட அந்தப் பெண் தேவன் புசிக்கவேண்டாம் என்று விலக்கின நன்மை தீமை அறியத்தக்க கனியைப் பறித்துப் புசித்து¸ தன் கணவனுக்கும் கொடுத்தாள். ஆதாமும் அதை வாங்கிப் புசித்து தேவனுடைய கட்டளையை மீறினான்; தேவனுக்குக் கீழ்ப்படியாமற்போனான். பக்தியுள்ள அந்த முதல் குடும்பத்திற்குள் பாவம் பிரவேசித்தது.

0 comments:

Post a Comment