" இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ..." (மத். 18:6).
நீங்கள் அநேக காரியங்களுக்காக கர்த்தரிடத்தில் ஜெபிக்கக்கூடும். இனிமேல் "ஆண்டவரே, என்னால் யாரும் இடறிப் போவிடக்கூடாது, வழிவிலகிப் போவிடக்கூடாது" என்று இன்னொரு காரியத்திற்காகவும் ஜெபியுங்கள். வேதம் சொல்லுகிறது, "இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாயிருக்கும்" (மத். 18:6).
ஏந்திரக்கல் மிக பளுவானவை. ஒவ்வொரு ஏந்திரக்கல்லும் ஏறக்குறைய ஒரு டன் எடையுள்ளதாயிருக்கும். இடறல் உண்டாக்குகிறவனுடைய கழுத்தில் அதை கட்டி சமுத்திரத்திற்குள் அமிழ்த்தும்போது, அந்த கல்லின் பளுவானது அவனை தலைகீழாக சமுத்திரத்தின் ஆழத்திற்குள் இழுத்துச் செல்லும். அவனால் தப்பவே முடியாது. தேவபிள்ளைகளே, உங்களுடைய பேச்சோ, சொல்லோ, செயலோ மற்றவர்களுக்கு இடறல் உண்டாக்காதபடி நடந்துகொள்ளுங்கள்.
இயேசுவின்மேல் அன்றைக்கிருந்த மக்கள் "இயேசுகிறிஸ்து வரிப்பணம் செலுத்துகிறதில்லை" என்று பொய்யாய்க் குற்றம்சாட்டினார்கள். இதனால் அநேகர் இடறிப்போகக்கூடும் என்று இயேசு நினைத்து, பேதுருவை நோக்கி, "நாம் அவர்களுக்கு இடறலாயிராதபடிக்கு, நீ கடலுக்குப் போ, தூண்டில்போட்டு, முதலாவது அகப்படுகிற மீனைப் பிடித்து, அதின் வாயைத் திறந்துபார்; ஒரு வெள்ளிப் பணத்தைக் காண்பாய்; அதை எடுத்து எனக்காகவும், உனக்காகவும் அவர்களிடத்தில் கொடு என்றார்" (மத். 17:27).
இன்னொரு முறை இயேசுவினுடைய வாய்ச் சொல்லை சோதித்து, அவரில் குற்றம் கண்டுபிடித்து, அந்த குற்றத்தை உலகமெல்லாம் எடுத்துச்சொல்லி அநேகருக்கு இடறல் உண்டாக்க எண்ணிய ஒரு கூட்டத்தார் இயேசுவினிடத்தில் வந்தார்கள். "இராயனுக்கு வரி கொடுக்கிறது நியாயமோ, அல்லவோ?" (மத். 22:17) என்று கேட்டார்கள். அதற்கு இயேசு "இராயனுடையதை இராயனுக்கும் தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள்" (மத். 22:21) என்று யாருக்கும் இடறல் உண்டாக்காத ஒரு பதிலை ஞானமாகச் சொன்னார்.
இராயனுடைய ஆட்சியுமிருக்கிறது. அதே நேரத்தில், கர்த்தருடைய ஆட்சியுமிருக்கிறது. இராயன் அரசாளுகிறபடியினாலே அவனுடைய சொரூபமும், மேலெழுத்துமுள்ள வரிக்காசை அவனுக்குச் செலுத்த வேண்டும். நீங்கள் பரலோக அரசாங்கத்தில் இருக்கிறீர்கள். பரலோக தேவனுடைய சாயலும், ரூபமும் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. தேவனுடையவர்களாகிய நீங்கள் உங்களையே தேவனுக்கு செலுத்த வேண்டியது அவசியம் அல்லவா?
தேவபிள்ளைகளே, மகிமையும், கனமும் கர்த்தருடையது. அதை அவருக்கு செலுத்துங்கள். இராயனுக்குரியது வெறும் வரிக்காக மட்டுமே. ஆனால் கர்த்தருக்குரியதோ மேன்மையானது. இராயனுடைய ஆட்சி கொஞ்சகாலம் மட்டுமே. ஆனால் கர்த்தருடைய அரசாங்கமோ, என்றென்றைக்கும் நிலைத்துநிற்கக் கூடியது .
நினைவிற்கு:- "இப்படியிருக்க, நாம் இனிமேல் ஒருவரையொருவர் குற்றவாளிகளென்று தீர்க்காதிருப்போமாக. ஒருவனும் தன் சகோதரனுக்கு முன்பாகத் தடுக்கலையும் இடறலையும் போடலாகாதென்றே தீர்மானித்துக் கொள்ளுங்கள்"
போதகர். ஜோசப் ஆஸ்பார்ன் ஜெபத்துரை
மின்னஞ்சல் - appam@appamonline.com
0 comments:
Post a Comment