அத்தியாயம் 8
(தேவ பக்தியுள்ள வாழ்வு!)
"ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கின் குமாரர்: ஏசா, இஸ்ரவேல் என்பவர்கள்." (1 நாளாகமம் 1: 34).
ஆபிரகாமின் குமாரன் ஈசாக்கு, ஈசாக்கின் குமாரர்கள் ஏசா மற்றும் யாக்கோபு. இவ்விருவரில் ஏசா அவபக்தியுள்ளவனாயிருந்தான். ஆனால் யாக்கோபு என்னும் மறுநாமமுள்ள இஸ்ரவேல் தேவபக்தியுள்ளவனாகக் காணப்பட்டான்.
ஏசாவைக் குறித்து வேதம் எபிரெயர் 12: 16, 17 ஆகிய வசனங்களில் இவ்விதமாகக் கூறுகிறது: "ஒருவனும் வேசிக்கள்ளனாகவும், ஒருவேளைப் போஜனத்துக்காகத் தன் சேஷ்டபுத்திரபாகத்தை விற்றுப் போட்ட ஏசாவைப் போலச் சீர்கெட்டவனாகவும் இராதபடிக்கும் எச்சரிக்கையா யிருங்கள். ஏனென்றால், பிற்பாடு அவன் ஆசீர்வாதத்தைச் சுதந்தரித்துக் கொள்ள விரும்பியும் ஆகாதவனென்று தள்ளப்பட்டதை அறிவீர்கள்; அவன் கண்ணீர்விட்டு, கவலையோடே தேடியும் மனம் மாறுதலைக் காணாமற்போனான்."
யாக்கோபு 'எத்தன்' என்கின்ற அர்த்தமுள்ள பெயரை உடையவனா யிருந்தாலும் அவனுக்குள் தேவனுடைய ஆசீர்வாதத்தைத் தானும் தன்னுடைய சந்ததியும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்கிற வாஞ்சை அதிகமாய்க் காணப் பட்டது.
தன்னுடைய சந்ததி ஒரு பக்தியுள்ள சந்ததியாகக் காணப்படவேண்டும் என்பதில் அக்கறை இருந்தது. ஆகவே, அவர் தேவன் மேல் அன்புகூர்ந்தார்; தேவனைத் தொழுதுகொள்ளவும், அவரை உண்மையாய்த் தேடவும் ஆரம்பித்தார்.
யாக்கோபுக்குப் பண்ணிரென்டு குமாரர்கள் இருந்தார்கள். இந்தப் பண்ணிரென்டு பேரும் பண்ணிரென்டு கோத்திரப் பிதாக்களாய் மாறினார்கள். அவர்களுடைய சந்ததி பலுகிப் பெருகி ஒரு தேசமாய் மாறினது. அப்படி உருவானதுதான் இஸ்ரவேல் என்னும் தேசம்.
யாக்கோபைத் தேவன் ஆசீர்வதித்து "தேவனுடைய பிரபு" என்னும் அர்த்தம்கொள்ளும் இஸ்ரவேலாய் மாற்றினார். இவ்வாறாக, யாக்கோபு பலுகிப் பெருகி 'இஸ்ரவேல்' என்னும் தேசத்தின் பிதாவாய் மாறினார்.
கற்பனைகளைக் கைக்கொள்!
"காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டு வருவார்." (பிரசங்கி 12:13, 14)
இஸ்ரவேலர்களாகிய யாக்கோபின் வம்சத்தாருக்கு அவர்கள் தலைவனாகிய மோசேயின் மூலமாய் பத்துக் கட்டளைகளைத் தேவன் கொடுத்தார். அதைத்தான் கற்பனைகள் அல்லது நியாயப்பிரமாணம் என்று அழைக் கிறோம். அவையாவன:
1. என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்க வேண்டாம்.
2. யாதொரு விக்கிரத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம்; நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.
3. கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக.
4. ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக.
5. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக.
6. கொலை செய்யாதிருப்பாயாக.
7. விபச்சாரம் செய்யாதிருப்பாயாக.
8. களவு செய்யாதிருப்பாயாக.
9. பிறனுக்கு விரோதமாய்ப் பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக.
10. பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக. (யாத்திராகமம் 20: 1-17)
ஆபிரகாம் காலம் முதல் இந்நாள் வரையிலும் பூமியில் வாழ்ந்து வருகிற மனுமக்களிடத்தில் தேவன் எதிர்பார்க்கும் ஒரு காரியம் தெய்வ பயம். மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் நம்மை உண்டாக்கிய தெய்வத்திற்குப் பயந்து, அவருடைய வழிகளில் நடக்க வேண்டும்.
அதற்காகத்தான் அவர் தம்முடைய வேதத்திலே கட்டளைகளையும் கற்பனைகளையும் கொடுத்திருக்கிறார். அவைகளை நாம் கைக்கொண்டு நடக்கும்பொழுது தீமை செய்கிறவர்களாய் இராமல் நன்மை செய்கிறவர்களாய்க் காணப்படுவோம். இதுவே சாலொமோன் என்னும் இஸ்ரவேலின் ராஜா நமக்குச் சொல்லும் அறிவுரை.
வாலிபனே, உன் சிருஷ்டிகரை நினை!
"வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றி னிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.
நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே." (பிரசங்கி 11: 9,10)
"நீ உன் வாலிபப் பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை..." (பிரசங்கி 12:1)
வாலிபப் பிராயத்திலே தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்னவென்றால்: சிருஷ்டிகரை நினைத்தல். மனிதன் தன்னுடைய இளமை (13 முதல் 19 வரையுள்ள வயது) மற்றும் வாலிபம் (20 முதல் 39 வரையுள்ள வயது) ஆகிய பருவங்களிலேயே தன்னுடைய சிருஷ்டிகரை அறிந்துகொள்ள வேண்டும், நினைக்கவேண்டும்.
தேவன் சிருஷ்டிகர் மாத்திரமல்ல, அவர் நியாயாதிபதி என்பதையும் அவன் அறிந்துகொள்ளவேண்டும். ஏனென்றால், தேவன் மனிதர்களாகிய நம் ஒவ்வொருவருடைய எண்ணங்கள், செயல்கள் மற்றும் வார்த்தைகளை நியாயத்தில் (நியாயத்தீர்ப்பில்) கொண்டுவந்து நிறுத்துவார், நியாயந் தீர்ப்பார்.
இந்த உலகம் ஏற்கனவே ஒருமுறை நியாயந் தீர்க்கப்பட்டு ஜலத்தினால் அழிக்கப்பட்ட ஒன்று என்பதை நாம் ஒருநாளும் மறந்துவிடவே கூடாது. இன்னொருமுறை இந்த உலகம் நியாயந் தீர்க்கப்பட்டு மிகப்பெரிய அழிவைக் காணப்போகிறது. அந்த அழிவு தண்ணீரினால் அல்ல, நெருப்பினால் (அக்கினியினால்) நடக்கப்போகிறது. ஆகவே, தெய்வபயத்தோடு நடந்துகொள்ளுவோம்; தேவனுடைய கற்கனைகள் யாவையும் கைக்கொள்ளுவோம். இதுவே நம் ஒவ்வொருவரிடமும் தேவன் எதிர்பார்க்கும் காரியம்; இதுவே காரியத்தின் கடைத்தொகை.